ஆல்கொண்டமால் கோயில் திருவிழாவில் மலைபோல் குவிந்த கால்நடை உருவார காணிக்கை பொம்மைகள்

உடுமலை : உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அளித்த கால்நடை உருவார பொம்மைகள் மலைபோல குவிந்தன.  உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மாலகோயில் என்றழைக்கப்படும் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கலையொட்டி மூன்று நாட்கள் விமரிசையாக திருவிழா நடைபெறும்.அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். தினசரி சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.

கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பக்தர்கள் வழிபட்டனர். ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக அளித்தனர். இதனால், கோயிலில் உள்ள நந்தி சிலை முன்பு காணிக்கை பொம்மைகள் மலைபோல் குவிந்தன. மேலும் மாடு, ஆடுகளையும் பக்தர்கள் தானமாக அளித்தனர். திருவிழாவையொட்டி ஏராளமான கரும்புகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.

உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சியில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் தேவராட்டம், சலகர் ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. டிஎஸ்பி., ஜெயச்சந்திரன் தலைமையில் ஊர்காவல் படையினர் உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: