தொடர் வறட்சியால் கிராமங்களில் வெறுமையான தானிய குழுமைகள்

சாயல்குடி : பருவமழையின்றி தொடர்ச்சியாக விவசாயம் பொய்த்துபோனதால் வீடுகளில் உள்ள தானிய குழமைகள் வெறுமையானதால் சாயல்குடி பகுதியில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. மானவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படும் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி தாலுகா பகுதியில் வழக்கமாக பருவமழை ஜூலை மாதம் பெய்யும், ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை காலம் கடந்து ஆண்டின் இறுதி வாரங்களில் மிதமான மழையாக பெய்து வருகிறது.

Advertising
Advertising

மழையை நம்பி கடந்த 8 ஆண்டுகளாக கடலாடி தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரிலும், முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 16 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டது. கமுதி தாலுகாவில் சுமார் 14 ஆயிரம் ஏக்கரிலும் நெல், மிளகாய், நிலக்கடலை, பருத்தி, மல்லி, எள், சூரியகாந்தி, சோளம் வகை சிறுதானிய பயிர்கள் போன்றவை பயிரிடப்பட்டது.

இதில் முக்கிய பயிராக நெல் பயிரிடப்படுகிறது. முளைத்து பயிராகும் தருவாயில், தொடர்மழை இல்லாமை மற்றும் நீர்வரத்து இல்லாததாலும், கண்மாய், குளங்கள் வறண்டதாலும் வளர்ந்த நெல் உள்ளிட்ட சிறுதானியவகை, எண்ணெய் வித்து பயிர்கள் கருகி வருகின்றன.

தொடர்ச்சியாக சுமார் 8 வருடங்களுக்கு மேலாக இந்நிலை நீடித்து வருவதால், கிராம மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் இப்பகுதி கிராமங்களில் இந்தாண்டும் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதியில் போதிய மழையின்றி தொடர்ச்சியாக பயிர்கள் கருகி, விவசாயம் பொய்த்து வருகிறது.

விவசாய நிலங்களை சீரமைத்தல், விதைகள் விதைப்பு, களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தும், சில ஆண்டுகளாக அனைத்தும் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடனில் தத்தளிக்கிறோம். விவசாயம் செழித்திருந்தால், அறுவடை செய்யப்படும் நெல் உள்ளிட்ட தானியங்களை வீடுகளில் உள்ள குழுமை, மச்சு போன்றவற்றில் சேமித்து வைத்து தேவைப்படும் போது வீடுகளிலியே அவித்து, அரிசியாக்கி சமைத்து சாப்பிட்டு வந்தோம், முதல் அறுவடை நெல்லை பொங்கலிட்டு, உழவு மாட்டுக்கு நன்றி கூறும் விதமாக பொங்கலிட்டும் வந்தோம், விதை மற்றும் வீட்டு தேவைக்கு போக மீதமுள்ள தானியங்களை கடைகளில் விற்று, கிடைக்கின்ற லாபத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல், புது வீடு கட்டுதல், புதுப்பித்தல், பொங்கல், தீபாவளி, மாசி களரி போன்ற குல தெய்வ வழிபாடு மற்றும் உள்ளூர் திருவிழா போன்ற பண்டிகைக்கு புத்தாடை வாங்குதல் உள்ளிட்டவைக்கு பயனடைந்தது.

ஆனால் தற்போது தொடர் வறட்சியால் நடைமுறைகள் மாறி, வறுமையால் விவசாயிகள் பரிதவித்து வருகிறோம். வறுமையால் பண்டிகையையும் மறந்து வருகிறது. அரசு பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கினாலும் கூட, அவை ஒரு பங்கு கஷ்டத்திற்கு கூட உதவவில்லை. எனவே வருங்காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க, அரசு முறையாக நீர்நிலைகளை தூர்வார வேண்டும், சிறிய நீர்தேக்கங்களை கட்ட வேண்டும். விவசாயம் பாதிக்கப்படும் போது, பயிர்காப்பீடு இழப்பீடு தொகை, வறட்சி நிவாரணம் போன்ற வற்றை தாமதமின்றி வழங்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: