போக்ஸ்வேகன் இன்று மாலைக்குள் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு: மாசு அளவை குறைத்துக்காட்டி மோசடி செய்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடெல்லி: டீசல் கார்களில் கருவி பொருத்தி மாசு அளவை குறைத்துக்காட்டி மோசடி செய்த வழக்கில், இடைக்கால டெபாசிட்டாக ₹100 கோடியை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இன்று மாலைக்குள் போக்ஸ்வேகன் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் இருந்து வெளியாகும் மாசு அளவை குறைத்துக்காட்ட மென்பொருள் கருவி பொருத்தி மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்தியாவில் விற்பனை செய்த 3,23,700 கார்களை திரும்பப்பெறுவதாக 2015 டிசம்பரில் இந்த நிறுவனம் அறிவித்தது. ஆனால் கார்கள் திரும்பப்பெறப்படவில்பலை. இதை தொடர்ந்து, இந்த நிறுவனத்துக்கு எதிராக டெல்லியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சோலானி அய்லாவதி உட்பட சிலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தனர். அதில்,”மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் போக்ஸ்வேகன் நிறுவன கார்கள் விற்பனைக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து கார்களில் மாசு அளவை கண்டறிய இந்திய வாகன ஆராய்ச்சி கூட்டமைப்பு (அராய்), கனரக தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்ட துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. இதில், போக்ஸ்வேகன் கார்களில் ஆய்வக சோதனை அளவை விட 5 முதல் 9 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறுவது கண்டறியப்பட்டது. இதுபோல் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1.1 முதல் 2.6 மடங்கிற்கு மாசு வெளியேறுவதாக அராய் ெதரிவித்தது.  இந்த வழக்கில் 2017ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பசுமை தீர்ப்பாயம், இந்தியாவில் கார்களை திரும்பப்பெற செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு போக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  இதுபோல், சுற்றுச்சூழல் மாசு விவகாரத்தில் இந்த நிறுவனம் இடைக்காட டெபாசிட்டாக ₹100 கோடியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும் என 2018ம் ஆண்டு நவம்பர் 16ல் உத்தரவிட்டது. இதை போக்ஸ்வேகன் டெபாசிட் செய்யவில்லை. இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மோசடி வழக்கில் போக்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராத தொகையை அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்றைக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுவன இயக்குநர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என குறிப்பிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: