எச்1பி விசாதாரர்களுக்கு அதிக சம்பளம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்: டிரம்புக்கு வலியுறுத்தல்

வாஷிங்டன்: ‘அமெரிக்காவில் எச்-1பி விசாவில் பணியாற்ற வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம், வசதியான பணி சூழல் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்க சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட  வேண்டும்’ என அட்லான்டிக் கவுன்சிலின் தெற்காசிய மையம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு எச்-1பி வழங்கப்படுகிறது. இந்த விசாவை இந்திய ஐ.டி தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவில் அமெரிக்கர்களின்  வேலைவாய்ப்புகள் பறிபோவதாக குற்றச்சாட்டு எழுந்தததால் எச்-1பி விசா நடைமுறையை கடுமையாக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இது இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் என்பதால், இந்த விசா  நடைமுறையை தளர்த்த வேண்டும் என அமெரிக்க அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து கடந்த வாரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘எச்-1பி விசா நடைமுறையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படும். இது எளிமையாகவும், வெளிநாட்டினர் அமெரிக்காவில்  தங்குவதை உறுதி செய்வதாகவும், குடியுரிமைக்கு வழி வகுப்பதாகவும் இருக்கும். மிகவும் திறமை வாய்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம்’ என தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான பிறகு, அட்லாண்டிக் கவுன்சிலின் தெற்காசிய மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த அமைப்பின் தலைவர் பாரத் கோபாலசாமி,  ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ரான்  ஹிரா ஆகியோர் கூறியிருப்பதாவது:தற்போதைய எச்-1பி விசா நடைமுறை அமெரிக்கர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எச்-1பி பணியாளர்களும் சுரண்டப்படும் சூழல் உள்ளது. பலர் மோசமான சூழலில் பணியமர்த்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி  நடக்கின்றன. அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

எச்-1பி விசாதாரர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் சீர்திருத்தம் தேவை. எச்-1பி விசாவில் தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு வசதியான  பணிச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த விசா திட்டம் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதாக இருக்க வேண்டும். அதிகளவிலான தொழிலாளர்களை குவிக்கும் திட்டமாக இருக்கக் கூடாது.இவ்வாறு கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: