குமாரசாமி அரசுக்கு குழப்பம் தீர்ந்தது : கர்நாடகாவில் பாஜ முயற்சி தோல்வி

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக  பாஜ சார்பில் மேற்கொண்ட முயற்சி, மூன்றாவது முறையாக தோல்வியடைந்துள்ளது.கர்நாடக  சட்டபேரவைக்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு கடந்த மே  12ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பாஜ 104, காங்கிரஸ் 79, மஜத 37 மற்றும்  சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதிக தொகுதிகளில் வெற்றி  பெற்றதால் தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜ தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது. அதே சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி  அமைத்து தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதால் ஆட்சி அமைக்க அழைக்கும்படி  ஆளுநர் வி.ஆர்.வாலாவிடம் கடிதம் கொடுத்தனர்.

Advertising
Advertising

ஆனால், பெரும்பான்மை  உறுப்பினர் பலத்தின் அடிப்படையில் பாஜவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.  அதன்படி முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். இதனிடையே எடியூரப்பா  பதவியேற்றதை ரத்து செய்துவிட்டு தங்கள் கூட்டணியை ஆட்சி அமைக்க  அழைக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், 24 மணி நேரத்தில் பேரவையில்  நம்பிக்கை வாக்கு பெறும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டது. பேரவையில்  பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் பதவியேற்ற 24 மணி நேரத்தில்  எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து கடந்த மே 23ம்  தேதி மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு, குமாரசாமி தலைமையில் பதவியேற்றது.  பேரவையில் பெரிய கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதே என்ற  கவலை எடியூரப்பா உள்பட பாஜ தலைவர்களுக்கு இருந்து வருகிறது. கடந்தாண்டு  ஜூலை மாதம் நடந்த முதல்கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பில் காங்கிரஸ் மற்றும்  மஜதவில் பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.  அந்த சமயத்தில் சில எம்எல்ஏக்களை ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம் மூலம் பாஜவுக்கு  இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள்  எம்எல்ஏக்கள் சரியாக பாதுகாத்து கொண்டதால், பாஜ மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த  டிசம்பர் மாதம் இரண்டாம் கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பின் போதும் பதவி  கிடைக்காதவர்கள் இரு கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியபோது  ஆட்சியை கலைக்க பாஜ இரண்டாவது முறையாக முயற்சித்து தோல்வியடைந்தது.

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீமாநாயக், கம்பிளி கணேஷ், சீமந்த்பாட்டீல்,  ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பாட்டீல், கவுரிசங்கர், சுதாகர், பசவனகவுடா  தத்தால், ரமேஷ் ஜார்கிஹோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மஹேஷ்கமடஹள்ளி ஆகிய  12 எம்எல்ஏக்களும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த நாகேஷ் மற்றும்  ஆர்.சங்கர் ஆகியோர் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். கடந்த  வாரம் அவர்கள் 14 பேரும் மும்பை சென்றதுடன் பாஜ தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். இது கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும்  கடந்த 15ம் தேதி சுயேச்சை எம்எல்ஏக்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர்  அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கடிதம்  கொடுத்தனர். இதுவும் கூட்டணி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘ஆபரேஷன்  தாமரை’ மூலம் 2 சுயேச்சைகள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12  பேரையும் இழுத்துக் கொள்ள அனைத்து முயற்சியும் பாஜ தரப்பில்  மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பாஜவின் சதியை முறியடிக்க வேண்டும்,  அதே சமயத்தில் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற  நோக்கத்தில் முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, நீர்பாசனத்  துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்  கே.சி.வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்  ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து தேசிய தலைவர் ராகுலும்  மாநில தலைவர்களிடம் தொடர்புக் கொண்டு அவர்களை சமாதானப்படுத்த  கேட்டுக்கொண்டார். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக  பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பாஜவுக்கு  தாவ திட்டமிட்டிருந்த எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கம்  வந்துவிட்டனர்.

ரமேஷ் ஜார்கிஹோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மஹேஷ்கமடஹள்ளி  ஆகிய 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மதில்மேல்  பூனையாக உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி தனது ஆதரவு 11  காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜவில் சேர்ப்பதின் மூலம் பெரிய சக்தியாக வளர  வேண்டும் என்று நினைத்தார். ரமேஷ்ஜார்கிஹோளியை பகடைகாயாக வைத்து கூட்டணி  ஆட்சியை கலைத்து பாஜ தலைமையில் ஆட்சி அமைப்பதின் மூலம் கட்சி மேலிடத்திடம்  சபாஷ் பட்டம் வாங்கி விடலாம் என்று எடியூரப்பா நினைத்தார். ஆனால்  எடியூரப்பா மற்றும் ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோரின் கனவை காங்கிரஸ் தலைவர்கள்  சுக்கு நூறாக்கி விட்டனர். இதன் மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும்  எடியூரப்பாவின் மூன்றாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதே  சமயத்தில் பாஜ மேலிடத்தின் வெறுப்புக்கும் ஆளாகும் சூழ்நிலைக்கு எடியூரப்பா  தள்ளப்பட்டுள்ளார். கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் விஷயத்தில் பாஜ மேலிடம்  எடியூரப்பாவுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் தவிர்த்ததும் அவரின்  முயற்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது.

‘உரிய நேரத்தில் தாவுவோம்’

அதிருப்தி எம்எல்ஏ. ரமேஷ் ஜார்கிஹொளி அளித்த பேட்டியில், ‘‘பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ எனக்கு தெரியாது. என்னை இரண்டு நாள் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். என்னை பொறுத்தவரை மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு என்னிடம் எம்எல்ஏ.க்களின் பலம் உள்ளது. கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் யாரும் என்னிடம் இல்லை என சில ஊடகங்கள் தவறுதலான செய்தியை வெளியிட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.க்களில் என்னுடன் ஆனந்த்சிங், சீமந்த் பாட்டீலை தவிர வேறு யாரும் இல்லை. ஆனால், ஆட்சி கவிழும் அளவுக்கு என்னிடம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் உள்ளனர். ஆபரேஷன் தாமரை திட்டத்தின் பட்டியலில் உள்ள எம்எல்ஏ.க்களின் பெயர்களை தற்போது என்னால் வெளியிட முடியாது. எனது ஆபரேஷனே வேறு விதமானது. உரிய நேரம் வரும்போது கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களுடன் பாஜ.வில் சேருவேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: