மத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் சங்கமம்: நாளை மறுநாள் கொல்கத்தாவில் பேரணி

கொல்கத்தா: மத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு கூட்டணியை கட்சிகள் உறுதிப்படுத்த, இந்த பொதுக்கூட்டம் முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது. மத்திய பாஜ பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ‘மகா பந்தனம்’ என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வந்தார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து வந்த காங்கிரசுடன் அவர் பழைய கசப்பை மறந்து கைகோர்த்துள்ளார். இதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, மக்களவை கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார்.

தொடர்ந்து, டெல்லியில் கடந்த டிசம்பர் 10ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, 5 மாநில தேர்தல் நடந்ததால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி சற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பேரணி, நாளை மறுநாள் (ஜன. 19) நடக்கிறது. ‘கடந்த 40 ஆண்டுகால காலத்தில் இந்தியா காணாத மாபெரும் பேரணியாக அமையும்’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மக்களவையில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் முதல் நாட்டின் தென்கடைக்கோடியில் உள்ள கேரளா மாநில ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் வரை அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இடதுசாரி கட்சிகளின் தலைவர்களில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரணியில் பங்கேற்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் பாஜவை எதிர்ப்பதற்கு கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மாயாவதி, தான் பங்கேற்கும் நிலை இல்லாதிருந்தால், வேறொரு தலைவரை நிச்சயம் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதேசமயம், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பங்குகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன். மேலும், திமுக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ஆம் ஆத்மி தலைவரும் ெடல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி ஆகிய பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேரணி பாஜ எதிர்ப்பு சக்திகளின் மையமாக அமைந்து, எதிர்ப்பு உணர்வுக்கு ஒரு புதிய எழுச்சியை தரும் என்று நம்புகிேறன். இவ்வாறு அவர் கூறினார். மக்களவை தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் ெபறுகிறது என்று அரசியல் ேநாக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இடதுசாரி புறக்கணிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் பேரணியில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், மம்தா பானர்ஜியுடனும் இடதுசாரிகளுக்கு சுமூகமான உறவு இல்லை. எனவே, அந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது. அதே வேளையில், மற்ற எதிர்க்கட்சிகள் அந்தப் பேரணியில் கலந்துகொள்வது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், மாநிலத்தில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் பங்கேற்பு

மத்திய பாஜவுக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த அடிப்படையில், நாளை மறுநாள் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் 10ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. அப்போது, ஒருமித்த கருத்துடன் காங்கிரஸ்  தலைமையில் மதச்சார்பற்ற அணியாக செயல்பட்டு பாஜவை வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவச் சிலை திறப்பு விழா கடந்த டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடந்தது. கருணாநிதி சிலையை நாடளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து  வைத்தார். அப்போது, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத யாத்திரை நாட்கள் குறைப்பு

மேற்குவங்க மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் 7 முதல் 14ம் தேதி வரை பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பாஜ கட்சி முடிவு செய்தது. இதற்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜ தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜ மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம்’ என தெரிவித்துள்ளது. அதனால், விரைவில் மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜ தீவிரப்படுத்தி உள்ளது. அத்துடன், தனது 40 நாள் ரத யாத்திரை திட்டத்தை 20 நாள்களுக்கானதாக பாஜ குறைத்துக் கொண்டுள்ளது.

டிஆர்எஸ் மவுனம்

தேசிய அளவில் பாஜ - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அல்லாத மாற்று அணியை அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். அவர் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோல்வி அடையச் செய்தது. இந்நிலையில், தேசிய அளவிலான மாற்று அணியை அமைப்பது தொடர்பாக ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்திரசேகர ராவ் தனித்தனியே சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மத்திய பாஜ அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தும் பேரணியில், சந்திரசேகர ராவ் பங்கேற்பது குறித்து எவ்வித அறிவிப்பும், அக்கட்சி தலைமை வௌியிடவில்லை. காரணம், காங்கிரஸ், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் பேரணியில் பங்கேற்க உள்ளதால், டிஆர்எஸ் புறக்கணிக்கும் என்றே தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: