கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் விதிகளை மீறிய தமிழக போலீசார் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டெல்லியில் மேத்யூ வழக்கு

புதுடெல்லி: கொடநாடு கொலை ,கொள்ளை விவகாரத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின்  கார் ஓட்டுனர் கனகராஜ், எஸ்டேட்டில் வேலை பார்த்தவர்கள் உட்பட மொத்தம் 5 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதேப்போல் வழக்கில் 2வது குற்றவாளியான சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்தனர்.

இவர்கள் மீது  எடப்பாடி பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், டெல்லி சென்று  சயன்,  மனோஜை கைது செய்து   சென்னை அழைத்து வந்தனர். ஆனால், இருவரையும் சிறையில் அடைக்காமல் சென்னை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது .இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேத்யூ சாமுவேல் நேற்று புதிய வழக்கை  தொடர்ந்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டை கூறியதால் சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் வைத்து தமிழக போலீசார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் மாநிலம் விட்டு வேறு ஒரு மாநிலத்திற்கு சென்று ஒருவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும் அவர்களை போலீசார் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க சொல்லியும் பண பேரம் நடத்தியுள்ளனர். மேலும் மேற்கண்ட இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் உள்ளதால் கேரள போலீசார் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேபோல், சயன்,  மனோஜ் கைது விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த  வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: