ராஜ்நாத் சிங் பரிந்துரை ரயில் பயணிகளுக்கு ஆன்லைன் எப்ஐஆர்

புதுடெல்லி: ‘‘ரயிலில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக பயணிகள் ஆன்லைனில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யும் வசதியை கொண்டு வர வேண்டும்’’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:தற்போது ரயிலில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக பயணிகள் ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு செய்யும் வசதி இல்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பயணிகள் ரயில்வே போலீஸ் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று எப்ஐஆர் பதிய வேண்டியிருக்கிறது. பின்னர், அவர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு சென்று அங்குள்ள மாவட்ட காவல் துறையில் புகார் தர வேண்டும். அப்படியே செய்தாலும், அவர்களுக்கு நியாயம் கிடைத்துவிடுமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

எனவே, பயணிகளின் சிரமத்தை போக்க ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு செய்யும் வசதியை கொண்டு வருவது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆலோசிக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை வழங்க உள்துறை அமைச்சகம் தயாராக உள்ளது. தற்போது, காவல்துறையில் உள்ள குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்பு (சிசிடிஎன்எஸ்) மூலமாக ஆன்லைனில் எப்ஐஆர் பதியும் வசதியை செய்ய முடியும்.மேலும், பயணிகள் தங்களின் உடைமைகளை, பெட்டிகளை ரயில்களில் ஏற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதை எளிதாக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். ரயில்வே போலீசார் பொதுமக்களுடன் நட்புடன் பழக வேண்டும். ரயில்வே போலீஸ் மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: