பாஜ, காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஜெகனுடன் டிஆர்எஸ் பேச்சுவார்த்தை

ஐதராபாத்: மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகள் நேற்று பேச்சு நடத்தினர்.தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார். சந்திரசேகர ராவ் தற்போது தேசிய அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். மக்களவை தேர்தலில் பாஜ, காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக, மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கடந்த 10ம் தேதி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். தொடர்ந்து, ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவகவுடா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணி அமைக்க ஆதரவு கோரினார்.

இந்த நிலையில், புதிய கூட்டணியில் ஆந்திர பிரதேச எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சேர்க்க சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இது தொடர்பாக டிஆர்எஸ் கட்சி நேற்று முன்தினம்  வெளியிட்ட அறிக்கை:

‘ஒய்எஸ்ஆர் காங்கிரசை புதிய கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் டிஆர்எஸ் நிர்வாகிகள் பேச்சு நடத்துவார்கள்.  இந்த குழுவில் டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், கட்சியின் மூத்த தலைவரும் எம்பி.யுமான வினோத் குமார், கட்சியின் பொதுச் செயலாளர்கள் பல்லா ராஜேஸ்வர் ரெட்டி, ஸ்ரவன்குமார் ரெட்டி ஆகியோர் இடம் பெறுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,  நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஐதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியை அவருடைய வீட்டில் இக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இக்குழுவுக்கு சந்திரசேகர ராவின் மகனான கே.டி.ராமராவ் தலைமை வகித்தார். பேச்சுவார்த்தைமுடிவு பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜெகன் மோகன் கருத்து

சந்திப்புக்குப் பிறகு  ஜெகன் மோகன் அளித்த பேட்டியில், ‘‘சந்திரசேகர ராவ் தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மாநிலத்தின் உரிமையை காப்பாற்ற, மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய தருணம் வந்து விட்டது. இதை சந்திரசேகர ராவ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்’’ என்றார்.

சபதத்தை நிறைவேற்ற கேசிஆர் தீவிரம்

தெலங்கானா  சட்டப்பேரவைக்கு மக்களவை தேர்தலுடன்தான் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் தேர்தலை சந்தித்தால் தனக்கு பாதகமாகி விடும் என அரசியல் கணக்கு போட்ட சந்திரசேகர ராவ், பேரவையை முன்கூட்டியே கலைத்து விட்டு கடந்த டிசம்பரில் தேர்தலை சந்தித்தார். அ்ப்போது, அவருடைய வெற்றி நூறு சதவீதம் உறுதியாகி இருந்தது.ஆனால், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தனது பரம எதிரியான காங்கிரசுடன் திடீரென கூட்டணி அமைத்து, தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். தீவிரமாக களமிறங்கி பிரசாரமும் செய்தார். அதனால், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், சந்திரபாபு நாயுடுவின் மீது கேசிஆர் மிகுந்த கோபமடைந்தார். பிரசாரத்தை தீவிரப்படுத்தி, தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய அவர்,  ‘சந்திரபாபு நாயுடு எனக்கு அளித்த பரிசை, ஆந்திராவில் அவருக்கு திருப்பி கொடுப்பேன்’ என சபதம் செய்தார். அதற்காகதான், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, சந்திரபாபு நாயுடுவை தோற்கடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: