இரட்டை இலை சின்னம் ஒதுக்கிய வழக்கு டிடிவி.தினகரன், இபிஎஸ் தரப்பு டெல்லி ஐகோர்ட்டில் காரசாரம்

புதுடெல்லி: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி.தினகரன், இபிஎஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று காரசார வாதம் செய்தன. இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான மதுசூதனன் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் டிடிவி.தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், செம்மலை மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது.நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி, சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் முன்னிலையில் டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “குக்கர் சின்னத்தை தங்களுககு  ஒதுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் டிடிவி,தினகரன் தொடர்ந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னும் முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் தரப்பு தெரிவித்து விட்டு, தற்போது இங்கு வந்து இந்த வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது என்பது நியாமற்றது’’ என வாதிட்டார்.இதற்கு சிங்வி அளித்த பதிலில், “தேர்தலை சந்திக்க எங்களுக்கு குக்கர் ஒதுக்கும்படிதான்  உச்ச நீதிமன்றத்தில் கேட்டோம். மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி முடிவு வந்த பிறகு, குக்கர் சின்னம் தொடர்பான வழக்கை விசாரிக்கவே தேவையிருக்காது என்று தான் தெரிவித்தோம்’’ என்றார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 18ம் தேதி அதாவது நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: