பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு இயக்கிய சிறப்பு பஸ்கள் மூலம் 4 நாளில் 9.2 கோடி வசூல்: 7.17 லட்சம் பேர் வெளியூர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 7.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.9.2 கோடி வசூலானதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு, சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 14,263 பேருந்துகளை இயக்கியது. இந்த பஸ்கள், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டது.பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடாட வசதியாக கடந்த 11ம் தேதி (வெள்ளி) முதலே சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் வசிப்பவர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். கடந்த 11ம் தேதி முதல் கடந்த திங்கட்கிழமை (14ம் தேதி) வரை சுமார் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் மற்றும் வழக்கமான பஸ்களும் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல ஒருவருக்கு கூட பஸ் வசதி இல்லை என்று சொல்லும் அளவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு, அனைவரும் சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாட அழைத்து செல்ல அரசு சிறப்பான ஏற்பாடு செய்திருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு திரும்ப 24,708 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், சென்னையில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகம் இல்லை. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கடந்த 11ம் தேதி (வெள்ளி) முதல் கடந்த 14ம் தேதி (திங்கள்) வரை சென்னையில் இருந்து 13,871 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் மட்டும் சுமார் 7,17,392 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொங்கலுக்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9 கோடியே 2 லட்சம் வசூலாகி உள்ளது. இதுதவிர வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும் இயக்கப்பட்டன” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: