இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படை மீது இந்தியா வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை படைகள், அவர்களின் இரு படகுகள் மீது தங்களின் படகுகளைக் கொண்டு மோதின. அத்தாக்குதலில் இரு படகுகளும் தகர்ந்து கடலில் மூழ்கின. மீனவர்கள் 9 பேரும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், அவர்களில் 8 பேரை மட்டும் சிங்களப்படை மீட்டு கைது செய்தது. கடலில் விழுந்து தத்தளித்த முனியசாமியை மீட்காமல் விட்டுச் சென்றது உள்ளிட்ட இலங்கை படைகளின் செயல்களால்தான் அவர் உயிரிழந்தார். அந்த வகையில் முனியசாமியின் மரணம் திட்டமிடப்பட்ட கொடூரக் கொலைதான். இதற்கு இலங்கை கடற்படை தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக நடந்த நிகழ்வுகளை இலங்கை அரசு தலைகீழாக மாற்றி தமிழக மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என்றும், அவ்வாறு கவிழ்ந்த படகுகளில் இருந்து எட்டு மீனவர்களை உயிருடன் மீட்டதாகவும் இலங்கை கடற்படை அதன் அதிகாரப்பூர்வ செய்தியில் கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் ஆகும்.இந்திய -இலங்கை மீனவளத்துறை அமைச்சர்களிடையே கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி கொழும்பில் நடந்த இரு தரப்புப் பேச்சுகளின் போது, ‘‘எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோரக் காவல்படையால் இலங்கை மீனவர்களோ, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களோ கைது செய்யப்படும் போது உடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தாக்கப்படுவதோ, உயிரிழப்புகளோ ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அத்தகைய ஒப்பந்தத்துக்குப் பிறகுதான் மீனவர் பிரிஸ்டோ சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வும், இப்போது அப்பாவி மீனவர் முனியசாமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காரணமானோருக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்.

மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமானால், இந்தியாவின் வலிமையை இலங்கை புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அதற்காக, மீனவர் படுகொலை குறித்து இலங்கை கடற்படையினர் மீது இந்தியா வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை அரசு விடுதலை செய்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் உயிரிழந்த மீனவர் முனியசாமியின் குடும்பத்திற்கு அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: