காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு: டிஜிட்டல் திரைகள் மூலம் திருடர்களை கண்காணிக்க ஏற்பாடு

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பெரிய சைஸ் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை நேற்றுமுன்தினம் முதல் பொதுமக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். காணும் பொங்கல் அன்று சிறுவர் முதல் பெரியர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, சுற்றுலா இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் விளையாடி மகிழ்வார்கள்.சென்னையில் சுற்றுலா இடங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு வெளிமாவட்டம் மற்றும் சென்னை புற நகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடுவார்கள்.

இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்ேவறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதேபோல், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைத்து சமூக விரோதிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆளில்லா விமானம் மற்றும் நவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்க விவேகானந்தர் இல்லம் அருகே சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பொதுமக்கள் குளிப்பதை தடுக்க கடற்கரையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க குதிரைப்படை மற்றும் கடலோர காவல் படை வீரர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த ஆண்டு விபத்தில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் சென்னை மாநகர காவல் துறை சார்பில் பல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: