கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கார் டிரைவர் இறப்புக்கு விபத்துதான் காரணம்: சேலம் டிஐஜி விளக்கம்

சேலம்:  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ்  செயற்கையாக விபத்து ஏற்படுத்தி கொல்லப்பட்டதாக அவரது அண்ணன் தனபால் புகார்  கூறியிருந்தார். இதற்கு சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் விளக்கம் அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, சமுத்திரம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(36). இவர், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இரவு 8.45 மணிக்கு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தனகிரி  பகுதியில் வாகன விபத்தில் சிக்கி பலியானார். குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு ராங் சைடில் வலது புறமாக வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க சாலை விபத்தால்  இயற்கையாக நடந்த  உயிரிழப்புதான். தற்போது அவரது சகோதரர் தனபால் மாறி, மாறி பேசி வருகிறார். அவர் ோலீசில் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு டிஐஜி கூறினார்.

எனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் செல்ல உள்ளேன்: டிரைவரின் அண்ணன் அறிவிப்பு

சேலம்: காவல்துறையினர் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். எனவே, எனக்கு நியாயம் கிடைக்க, நீதிமன்றம் செல்ல உள்ளேன் என்று கனகராஜின் அண்ணன் கூறினார். டிரைவர் கனகராஜின் மரணம் சாலை விபத்தால் நடந்த உயிரிழப்பு தான் என டிஐஜி ெசந்தில்குமார்  கூறியிருப்பது குறித்து அவரது அண்ணன் தனபால் அளித்த பேட்டி:முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை அப்படியே சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் ஒப்பித்துள்ளார். எனது தம்பி சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.  காவல்துறையினர் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். எனவே, எனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், நீதிமன்றம் செல்ல உள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சிலர் கண்காணித்து நோட்டமிட்டு வருகின்றனர். எனக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனக்கும், எனது  குடும்பத்தினருக்கும் ஏதாவது நேர்ந்தால், அதற்கு முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு தனபால் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: