சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் திறப்பு விழா 15 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ஒப்பந்தம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: தமிழகத்தில் புதிதாக 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று  முதல்வர்  பழனிசாமி பேசினார். அண்ணா பூங்காவில் ₹80 லட்சத்தில் கட்டப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:சேலத்தில்  எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் மணிமண்டபத்தையும்,  உருவச்சிலைகளையும் திறந்து வைப்பதில் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன். எத்தனை  தடைகள் வந்தாலும், இடைஞ்சல்கள்  செய்தாலும்,  எங்கள் மீது எத்தனை பழிகளை  சுமத்தினாலும், இந்த அரசு தொடர்ந்து மக்களுக்கு  சேவை செய்யும். எம்ஜிஆர்,  ஜெயலலிதா மணிமண்டபம் அமைந்துள்ள ஓமலூர் சாலைக்கு  ‘பாரத ரத்னா டாக்டர்  எம்ஜிஆர்  சாலை’ என்று பெயர் சூட்டப்படும்.  மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆர்,  ஜெயலலிதா சிலைகளுக்கு ஆண்டுதோறும் அரசு  சார்பில் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்படும்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.15 லட்சம் பேருக்கு லேப்டாப்: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில், ₹90 கோடி செலவில் புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகள் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா  மகுடஞ்சாவடியில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் பஸ்போர்ட் அமைக்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு இதுவரை 37 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக 15 லட்சம் பேருக்கு ேலப்டாப் வழங்க ஒப்பந்தம்  போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ வசதி சிறப்பாக இருக்கிறது. 2 கையும் இல்லாதவருக்கு, இறந்த ஒருவருடைய கையை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அந்த கை மூலம் அவர் வணக்கம்  சொல்கிறார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: