கோபி அருகே கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் மூழ்கி இளம்பெண் உட்பட 3 பேர் பலி: இருவர் உயிருடன் மீட்பு

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் மூழ்கி  திருப்பூரை சேர்ந்த இளம் பெண் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணைக்கு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவு வருகின்றனர்.   நேற்று, திருப்பூரை சேர்ந்த தாஸ்(29), யோகேஷ்வரன்(24),  ஜெனிட்டாமேரி(22), மெர்சி(49) அவரது மகன்கள் அலெக்ஸ்(27), செபாஸ்டின்(25), அலெக்சின் மனைவி டயானா(24), உறவினர்கள் கிளிண்டன்(21), அமலா(21), டெய்சி(29) உள்ளிட்ட 10 பேர் கோபியில் உள்ள சர்ச் ஒன்றின் பாதிரியார்  தம்பிதுரை(49) என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். அனைவரையும் தம்பிதுரை கொடிவேரி அணைக்கு அழைத்து சென்றுள்ளார்.   பின்னர் அங்குள்ள மற்றொரு உறவினரின் தோட்டத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் குளித்துள்ளனர். தாஸ் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி விழுந்த தாஸ் ஆற்றில்  மூழ்கினர்.

அதை பார்த்த யோகேஷ்வரன், ஆற்றில் குதித்து தாஸை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படவே, ஜெனிட்டாமேரி சுடிதார் துப்பட்டாவை ஆற்றில் வீசி இருவரையும் காப்பாற்ற  முயன்றுள்ளார். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த ஜெனிட்டாமேரி, ஆற்றில் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கவே உடன் வந்தவர்கள், அவர்கள் மூன்று பேரையும் காப்பாற்ற  முயன்றுள்ளனர். அதில் மேலும் இரண்டு பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்படவே, மற்றவர்களால் இரண்டு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஆனால், அதற்குள் ஜெனிட்டாமேரி, தாஸ், யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி  பலியானார்கள். பங்களாபுதூர் போலீசார் சென்று மூன்று பேரின் உடலையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: