பொங்கலுக்கு மது விற்பனை 303 கோடி

சென்னை: பொங்கல் மற்றும் போகி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.303 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 4,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் சாதாரண நாட்களில் ரூ.75 கோடி முதல் ரூ.85 கோடி  வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த விற்பனையானது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகரிக்கும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது 4 நாட்கள் விடுமுறையில் ரூ.602 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது.  ஆனால், இந்த வருடம் புத்தாண்டின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. அதன்படி, போகி பண்டிகையின் போது ரூ.148 கோடிக்கும், பொங்கல் அன்று  ரூ.155 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தமாக ரூ.303 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

இதேபோல், 2018ம் ஆண்டு போகி பண்டிகையின் போது ரூ.92 கோடிக்கும், பொங்கல் அன்று ரூ.138 கோடிக்கும் என மொத்தம் ரூ.220 கோடிக்கு மதுவிற்பனையானது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு போகி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது மதுவிற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.83 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த  ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே தங்களின் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை  என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலேயே குடிமகன்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதுவும் கடந்த இரண்டு நாட்களில் விற்பனை அதிகரிக்க ஒரு காரணம் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: