தமிழகம் முழுவதும் 45 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி

சென்னை: தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் 45 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளித் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1,  பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் நடக்க உள்ளன. ஒரே மாதத்தில் 3 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடப்பதால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்நிலையில், 120 கல்வி மாவட்டங்களில் தற்போது 45 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களில் தற்போது பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு வகித்து வருகின்றனர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்களை தயாரித்தல், தேர்வு மையப் பணிகளை கவனித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டிய தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருவதால் பள்ளிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதற்கான கண்காணிப்பு பணிகளையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணிச் சுமை காரணமாக தலைமை ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 45 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களில் அலுவலர்களை நியமித்தால் தான் பொதுத் தேர்வு  கண்காணிப்பு பணிகள் சுணக்கம் இல்லாமல் நடக்கும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில், 23ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் தேர்வுப் பணிகள் மேலும் பாதிக்கப்படும். அத்துடன் தலைமை ஆசிரியர்களின் பற்றாக்குறையும் ஏற்படும் நிலையும் உள்ளது. அதனால் தொடக்கக் கல்வித்துறை உடனடியாக, 45 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களையும் நிரப்பினால் தான், தேர்வுப் பணிகள் பாதிக்காது.

உயர்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மட்டும் அல்லாமல், கீழ் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்களையும் நடத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: