கோஹ்லி 104, டோனி 55* ரன் விளாசல் : அடிலெய்டில் இந்தியா அசத்தல் வெற்றி

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது.அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 131 ரன் (123 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். மேக்ஸ்வெல் 48 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 29, கவாஜா 21, ஹேண்ட்ஸ்கோம்ப் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

Advertising
Advertising

இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் 4, ஷமி 3, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான் 32, ரோகித் 43, ராயுடு 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி - டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 82 ரன் சேர்த்தது. ஒருநாள் போட்டிகளில் தனது 39வது சதத்தை நிறைவு செய்த கோஹ்லி, 104 ரன் எடுத்து (112 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

இந்தியா 49.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. டோனி 55 ரன் (54 பந்து, 2 சிக்சர்) தினேஷ் கார்த்திக் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் பெஹரன்டார்ப், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கோஹ்லி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி நாளை காலை 7.50க்கு தொடங்குகிறது.

‘ஒன் ஷார்ட்’ டோனி...:

அடிலெய்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், டோனி பேட் செய்தபோது லயன் வீசிய 45வது ஓவரின் கடைசி பந்தை தட்டிவிட்ட டோனி ஒரு ரன் ஓடினார். ஆனால், மறு முனையில் அவர் கிரீசை தொடாமலே அடுத்த ஓவரை சந்திக்க தயாரானதை களத்தில் இருந்த நடுவர்கள் கவனிக்கத் தவறினர். ஆனால், வீடியோ ரீப்ளேயில் இதை கண்டுபிடித்த ஆஸி. முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் உடனடியாக ட்வீட் செய்தார். டோனிக்கு ஒரு ரன் குறைந்திருக்கும் என்பதோடு, கடைசி ஓவர் வரை பரபரப்பாக நீடித்த ஆட்டத்தின் முடிவிலும் மாற்றம் இருந்திருக்கும் என்று ஆஸி. ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: