கர்நாடகாவில் உச்சகட்ட குழப்பம்: ராகுல் திடீர் தலையீடு; பாஜ பிடியில் இருந்த 3 பேர் திரும்பினர்

* குமாரசாமி அரசுக்கு 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றுள்ளதால், அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. எனினும், காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி தலையீட்டால் பாஜ பிடியில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் பெங்களூரு திரும்பியதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக  பாஜவினர் கூட்டணியை கவிழ்க்க வியூகம் வகுத்து காய் நகர்த்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. மஜத-காங்கிரஸ்  கூட்டணியில் உள்ள 12 எம்எல்ஏக்கள் பாஜவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்  வெளியாகியது.  கடந்த 14ம் தேதி 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மும்பை மற்றும்  டெல்லி சென்று முகாமிட்டதால் சந்தேகத்தை அதிகரித்தது. அதே சமயத்தில்  கூட்டணியில் உள்ள எந்த எம்எல்ஏவும் கட்சி தாவ மாட்டார்கள். ஆட்சிக்கு  ஆபத்துமில்லை என்று முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர்  பரமேஸ்வர் உள்பட இரு கட்சி மாநில தலைவர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள்.  மஜத-காங்கிரஸ்  கூட்டணி அரசுக்கு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆர்.சங்கர் மற்றும் நாகேஷ் ஆகியோர் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநர் வி.ஆர்.வாலாவை நேரில்  சந்தித்து நேற்று முன்தினம் அவர்கள் கடிதம்  கொடுத்தனர். இரு சுயேட்சை எம்எல்ஏக்கள்  எடுத்த முடிவு ஆளும் கூட்டணி அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சி அமைக்க  வேண்டும் என்ற பாஜவின் முயற்சிக்கு  முதல் வெற்றி கிடைத்தது.

 மாநில  சட்டப்பேரவையில் பாஜவுக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர். இரு சுயேட்சைகள் பாஜவை  ஆதரித்தால் உறுப்பினர் எண்ணிக்கை 106 ஆக உயரும். இருப்பினும் பாஜ ஆட்சி  அமைக்க வேண்டுமானால் இன்னும் 7  எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதே சமயம் இரு சுயேட்சை  எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்ப பெற்றதால் குமாரசாமி அரசுக்கு எந்த பாதிப்பும்  இல்லை. 113 பெரும்பான்மையில் 117 இடங்கள் மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு  தற்போது உள்ளது.மஜத-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 10 எம்எல்ஏக்களை ஆபரேஷன் தாமரை திட்டம்  மூலம் பாஜவுக்கு இழுப்பதற்கான முயற்சி பாஜ வட்டாரத்தில் தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி ஆட்சியில் உள்ள   20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாஜவில் இணைய தயாராக உள்ளதாக பாஜ தேசிய  தலைவர் அமித்ஷாவுக்கு கர்நாடக மாநில பாஜ தலைவர்கள் தகவல்  கொடுத்துள்ளதாகவும், அந்த எம்எல்ஏகளை கட்சியில் சேர்த்து கொள்ள  பாஜ தலைமை  இன்னும் பச்சை கொடி காட்டவில்லை என்று பாஜ வட்டாரம் மூலம் தெரியவருகிறது. மக்களவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில் கர்நாடக  மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தால் அது நாடாளுமன்ற தேர்தலில்  பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற அச்சம் பாஜ  தலைமைக்கு உள்ளதால் தயக்கம் காட்டி  வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா  செய்துவிட்டு பாஜவில்  இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஆவேசமடைந்த கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சித்தராமையா கூறுகையில், ஆளும் கூட்டணியை உடைக்க பாஜ முயற்சி மேற்கொண்டால் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். பாஜ ஆபரேஷன்  ‘தாமரை’ திட்டம் கையில்  எடுத்தால் நாங்களும் ஆபரேஷன் ‘கை’ திட்டத்தை கையில்எடுப்போம். அது பாஜவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.  அதேபோல் பாஜவில் உள்ள 7 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில்  உள்ளதாக மஜதவை  சேர்ந்த அமைச்சர்கள் சி.எஸ்.புட்டராஜு தெரிவித்துள்ளது பாஜ  வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளும் கூட்டணி மற்றும்  பிரதான  எதிர்க்கட்சியான பாஜவில் நிமிடத்திற்கு நிமிடம் நடந்துவரும் சம்பவங்கள்  அரசியல் அரங்கில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த நேரத்தில்  என்ன நடக்குமோ என்ற பரபரப்பு காணப்படுகிறது.இதனால் மாநில அரசியல் நெருக்கடி குறித்து துணைமுதல்வர் பரமேஸ்வர், கர்நாடக மாநில  காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன  கார்கே உள்பட மூத்த தலைவர்கள்,  அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு தொடங்கி  நேற்று மாலை வரை கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்  கே.சி.வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தினர். அதேபோல் முதல்வர் குமாரசாமி உள்பட  மஜத  அமைச்சர்களுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆலோசனை நடத்தினார். மேலும்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய  தேவகவுடா, ‘காங்கிரஸ் எம்எல்ஏகள் கட்சி மாறாமல்  பார்த்து கொள்ளும்படி கேட்டு  கொண்டார்’.

 மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராகுல்காந்தி, ‘கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள  குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டுமானால் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில்   5 ஆண்டுகள் முழுமையாக அமைச்சர் பதவி வகித்து தற்போதும் அமைச்சராக உள்ள  மூத்த தலைவர்கள் 5 பேர் உடனடியாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்துவிட்டு புதியதாக பீமாநாயக், பி.நாகேந்திரா,  உமேஷ்ஜாதவ் மற்றும்  சுயேட்சை எம்எல்ஏ நாகேஷ் ஆகியோரை அமைச்சரவையில் சேர்த்து கொள்ள ஏற்பாடு  செய்யும்படி’ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ராகுல்காந்தியின் உத்தரவை ஏற்று இரண்டொரு  நாளில் 5 மூத்த காங்கிரஸ்  அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல்காந்தியின்  உத்தரவை தொடர்ந்து மும்பையில் தனியார் சொகுசு ஓட்டலில்  தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் டி.கே.சிவகுமார்,  தினேஷ்குண்டுராவ் ஆகியோர் முதல் கட்டமாக தொலைபேசியில்  பேசினார்கள். அதை  தொடர்ந்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் பரமேஸ்வர்,  கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் தொலைபேசியில்  பேசினர்.

இவர்களின் சமாதானத்தை ஏற்று மூன்று  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு திரும்பியுள்ளனர். ரமேஷ்ஜார்கிஹோளி,  மஹாந்தேஷ் கமட்டஹள்ளி, ஆர்.சங்கர் உள்பட 5 பேர் தொடர்ந்து மும்பையில்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரத்தை பிடிப்பதற்காக ஆளும்  கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சியும்  நடத்திவரும் அரசியல் பகடை ஆட்டத்தில்  யார் வெற்றி பெறுவார்கள் என்பதே மாநில மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

நோ டென்ஷன்

குமாரசாமி  கூறியதாவது: கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று மீடியாக்களில் வரும்  செய்திகளை பார்த்து நான் மகிழ்ச்சியாக ரசித்து கொண்டிருக்கிறேன். ஆட்சி  நிர்வாகம் கொடுத்துவரும் நானே டென்ஷன் ஆகாமல்  இருக்கும்போது நீங்கள் ஏன்  டென்ஷனாக இருக்கிறீர்கள். ஆட்சி கலைக்கும் பாஜவின் முயற்சியும் பலிக்காது. ஆட்சி கலைந்துவிடுமா என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பும் நடக்காது. கூட்டணியை  உடைக்க பாஜ என்னென்ன  தந்திரங்களை கையில் எடுத்தாலும் அதற்கு நூறு மடங்கு  பதிலடி கொடுக்க நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: