பொங்கல் விடுமுறையால் களைகட்டியது... திற்பரப்பு அருவியில் ஆபத்தான குளியல்

குலசேகரம் : தமிழகத்தில் தற்போது பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.  கடந்த சனிக்கிழமை முதலே சுற்றுலா தலங்களில் மக்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். அதன்படி குமரியில் உள்ள சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாதலமாக விளங்குவது திற்பரப்பு அருவிதான். கடும் வெயில்  நிலவினாலும் மிதமான அளவு தண்ணீர் இங்கு கொட்டுவதை பார்க்க முடிகிறது. பகலில் கடும் வெயில் அடித்தாலும் இரவு நேரத்தில் கடுங்குளிர் சீசன் நிலவுகிறது. அருவியை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மரங்கள் அடந்த சோலை வனம் போல் உள்ளது. ஆகவே வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இதனால் தண்ணீர் ஜில்லென்று குளிர்ந்த நிலையில் கொட்டுகிறது.

ஆபத்தான குளியல்

கடும் வெயிலில் அல்லல்பட்டு வரும் மக்களுக்கு குளிர்ந்த தண்ணீர் இதமான சூழலை ஏற்படுத்துகிறது. இதேபோன்று திற்பரப்பு அருவிக்கு மேல் பகுதியில் உள்ள தடுப்பு அணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்படுகிறது. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகுகளில் உல்லாச சவாரி செய்து கோதையாற்றின் இருகரைகளிலும் உள்ள வனத்தை கண்டு ரசித்தனர். பல இடங்களில் உள்ள அருவிகள் வறண்டு விட்ட நிலையில் இங்கு தண்ணீர் கொட்டி வருகிறது. குளுமையான சீசன் நிலவுவதாலும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தொடர்ந்து விடுமுறை காரணமாக கூட்டம் களைகட்டியுள்ளது. பொங்கல் விடுமுறையான நேற்று காலையில் மகரஜேதி தரிசனம் முடிந்து வந்த சபரிமலை பக்தர்கள் கூட்டத்தால் திற்பரப்பு அருவி களைகட்டியது. நேரம் செல்ல செல்ல உள்ளூர், வெளியூர் என 100 கணக்கான வாகனங்களில் பயணிகள் வந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் அந்த பகுதியே திக்கு முக்காடியது. திடீரென அந்த பகுதிகளில் தற்காலிக கடைகளும் தோன்றின. திற்பரப்பில் தற்போது மிதமான அளவு  தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியின் உள்ளபகுதியில் உள்ள பாறைகள் வெளியே  தெரிகிறது. எப்போதும் தண்ணீர் கொட்டுவதால் பாறைகள் பாசி படிந்து வழுக்கும்  தன்மையுடன் உள்ளது. உற்சாகபானம் அருந்தி வரும் சுற்றுலா பயணிகளுக்கு  இந்த  பாறைகள் மீது ஏறி நின்று குளிப்பதற்கான ஆசை வந்து விடுகிறது. இதன் விளைவாக சுற்றுலா பயணிகள்  சிலர் திடீரென பாறைகளின் மேலே ஏறி உற்சாக குளியல் போடுகின்றனர். கரணம்  தப்பினால் மரணம் என்பது தெரியாமல் உற்சாகத்தில் திளைக்கின்றனர். எனவே  போலீசார் அருவியின் உள்பகுதியில் உள்ள பாறைகளில் சுற்றுலா பயணிகள் ஏறுவதை  கண்காணிக்க வேண்டும். ஆபத்தான பாறைகளில் ஏற கூடாது என்று எச்சரிக்கையுடன்  கூடிய அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கேரிக்கை  விடுத்துள்ளனர்.

தொட்டிபாலம்

இதேபோல ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டிபாலம் பகுதியிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் பார்க்க முடிந்தது. உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் பயணிகள் மாத்தூர் தொட்டி பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து விண்ணை முட்டு அளவில் மலைகளையும், இயற்கை அழகையும் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.ஆனால் அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் போன்றவை குறைவாக இருந்ததால்  பயணிகள் கடும் அவதியடைந்தார். மாத்தூர் தொட்டி பாலத்தை சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்களும் பொதுமக்கள் நெரிசலுமாகவே இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் அன்னாச்சி பழம், அயனி, பலா பழங்களை விரும்பி வாங்கி சென்றனர். விடுமுறை நாட்களில் தொடர்ந்து சுற்றுலா தலங்கள் களைகட்டி வருவதுடன், சுற்றுலா பயணிகளையும் குதூகலமடைய செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: