பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : 21ம் தேதி தேரோட்டம்

பழநி : பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். இத்திருவிழாவிற்கு டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கி விட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரரான முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி.சிவநேசன், என்.செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்குமார், கண்பத் ஹோட்டல்ஸ் ஹரிஹரமுத்து, செந்தில், நகராட்சி ஆணையர் நாராயணன், டிஎஸ்பி விவேகானந்தன், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, ஸ்ரீமது கொங்கு வையாபுரி மடாலய சங்க நிர்வாகிகள் டாக்டர் ராமசாமி, டாக்டர் கந்தவேல், வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், பாஜ நிர்வாகி திருமலைசாமி, நியூ திருப்பூர் லாட்ஜ் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. தைப்பூச தேரோட்டம் 21ம் தேதி நடக்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம் தைப்பூச திருவிழா காரணமாக 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: