உளுந்தூர்பேட்டை அருகே பனி மூட்டத்தால் தடுப்பு கட்டையில் மோதி சொகுசு பஸ் கவிழ்ந்தது: 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்து தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தை தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(39) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த பேருந்து இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் காந்திநகர் பகுதியில் வந்த போது கடுமையான பனி மூட்டம் காரணமாக திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் மற்றும் பேருந்தில் வந்த கோவை, திருப்பூர், சென்னையை சேர்ந்த தன்ராஜ்(70), வைஷ்ணவி(22), அனுப்ரியா(26), பிரதீப்குமார்(39), வெங்கடேஷ்(25), ஆகாஷ்(31), சுபாஷிணி(25), தாரணி(51), மதுதன்ராஜ்(47) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனால் சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சாலையின் நடுவே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அனைத்து பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியில் இருந்து 7 மணி வரையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: