கண்டுகொள்ளாத அரசு மருத்துவமனை விபத்தில் சிக்குவோர் உயிரோடு விளையாடும் ஆம்புலன்ஸ்கள்

* காசு பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்

* நாமக்கல்லில் பேரத்தால் தொடரும் விபரீதம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள், கொடுங்காயம் ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும், கடந்த ஆண்டில் சுமார் 2 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் இரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விட்டன. பைபாஸ் சாலை, 4 வழிச்சாலையும் புதிதாக போடப்பட்டுள்ளது. இதில் அதிவேகமாக பயணிப்பவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள். சாலை விபத்துக்களில் சிக்கி, படுகாயம் அடையும் நபர்களின் உயிருடன் நாமக்கல்லில் உள்ள சில தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விளையாடுகிறார்கள். இதற்கு அரசுத்துறை அதிகாரிகளும் துணை போவது தான் கொடுமை. நோயாளிகளை அழைத்து சென்றால், அதன் மூலம் இன்சூரன்ஸ் பணம், அதற்கு கமிஷன் ஆகியவற்றை தனியார் மருத்துவமனையில் கவனிப்பு பெறலாம் என்ற பணத்தாசையில், மனிதாபிமானமற்ற இந்த செயலில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், புரோக்கர்கள், வழக்கறிஞர்கள், அவரது உதவியாளர்கள் பலரும் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து பற்றி தகவல் அறிந்து கொள்ளவும், அடிபட்டு வரும் நபர்களை, ரெபர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சில வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்டம் முழுவதும் 22,108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. இவர்களுக்கு போட்டியாக 200க்கும் அதிகமான தனியார் நிறுவன ஆம்புலன்ஸ்கள் ஓடுகிறது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், எங்காவது விபத்து நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பது இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களின் வேலை. இதற்காக ஊருக்கு ஒரு வாட்ஸ்அப்  குரூப்கள் அமைத்து தகவல் பரிமாறி கொள்கிறார்கள்.

விபத்து பற்றி தகவல் வந்த உடன், அங்கு 108 ஆம்புலன்ஸ் செல்லும் முன்பு, தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் சென்று உயிருக்கு  பேராடும் நபர்களை அவசரம், அவசரமாக ஏற்றி கொண்டு குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைக்கு அசுர வேகத்தில் பறக்கிறார்கள். விபத்தில் சிக்கிய வாகனத்தின் இன்சூரன்ஸ் மூலம் நஷ்டஈடு பெற்று சிகிச்சைக்கு பணம் கட்டி விடலாம் எனக்கூறி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். நோயாளியை கொண்டு வந்ததற்காக டாக்டரிடம் ஒரு கமிஷன் பெற்றுகொண்டு, அடுத்த விபத்தை எதிர்பார்த்து பறந்து விடுகிறார்கள். ஆனால், டிஸ்சார்ஜ் செய்யும் போது, இன்சூரன்ஸ் பணம் வர தாமதம் ஆகும். பணம் கொடுத்தால் தான் வீட்டுக்கு போக முடியும் எனக்கூறி, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பணம் கேட்டு, நோயாளிகளை நிர்பந்தம் செய்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் பணத்தை புரட்டி கட்டி விட்டு அப்பாவி மக்கள் செல்கிறார்கள். விபத்தில் அடிபட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நபர்கள், அபாய கட்டத்தில் இருந்தால், அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சப்தம் இல்லாமல் அனுப்பி வைத்து விடுகிறார்கள். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற சில தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு காவல்துறை, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதால் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஆண்டாக நடைபெறும் இந்த ஆபத்தான விளையாட்டை முடிவுக்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. விபத்தில் சிக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான நபர்களை, இங்குள்ள மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், நோயாளியின் உறவினர்களை, உயிருடன் விளையாடும் புரோக்கர்கள் கேன்வாஸ் செய்து தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுகிறார்கள்.

அரசு மருத்துவமனையில் பணி புரியும் சில டாக்டர்களும், இந்த கொடூரத்திற்கு துணைபோகும் அவலம் நாமக்கல்லில் தொடர்ந்து நடந்து வருவது சோகத்தின் உச்சம். இத்தனைக்கும், நாமக்கல் அரசு மருத்துவமனையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும் இருப்பதாக இங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சியினர்களும் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு 10 பேர் விபத்தில் சிக்கி, நாமக்கல் அரசு மருத்துமனைக்கு வந்தால், அதில் 9 பேர் தனியார் மருத்துவமனைக்கு தான் வலுக்கட்டாயமாக புரோக்கர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத் கூறியதாவது: மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களில் சிலர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுடன் கூட்டணி அமைத்து, விபத்து பற்றி தகவல்களை பரிமாறி கொள்கிறார்கள். இதனால் விபத்து நடந்த இடத்துக்கு தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் தான் முதலில் செல்கிறது. இதை தடுக்கவேண்டும். பலரும் கூட்டணி போட்டு மனித உயிர்களுடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கமிஷன் அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு புரோக்கர்கள் அழைத்து செல்கிறார்கள். சில புரோக்கர்கள் அடியாட்கள் மூலம் அரசு மருத்துவமனை டாக்டர்களை மிரட்டி, நோயாளிகளை அழைத்து செல்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இரவிலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் புரோக்கர்கள் தங்கியிருந்து கண்காணித்து, பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்படுகிறார்கள். மனித உயிர்களை காப்பாற்ற வேண்டியதை கடமையாக கருதாமல், காசு பார்க்கும் தொழிலாக நாமக்கல்லில் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளே வராதே, கண்காணிப்பாளர் அதிரடி

நாமக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செல்வகுமார் கூறுகையில், ‘தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஊழியர்கள் யாரும் அரசு மருத்துவமனைக்குள் வரக்கூடாது என கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளேன். மருத்துவமனைக்குள் வந்து நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் யாரும் பேசக்கூடாது என, அவர்களை நேரில் அழைத்தும் கூறிவிட்டேன். விபத்தில் சிக்கி காயம் அடையும் நபர்களுக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது,’ என்றார்.

கிரிமினல் வழக்கு பாயும்

நாமக்கல் டிஎஸ்பி ராஜேந்திரன் கூறுகையில், ‘ஆம்புலன்ஸ் வாகனங்கள், நகர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டும் தான் செல்லவேண்டும் என அனைத்து ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்தில் அடிபடும் நபர்களை, குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்தும், ஆம்புலன்ஸ்  டிரைவர்களை எச்சரித்துள்ளோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தவறு செய்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது விரைவில் வழக்குபதிவு செய்யப்படும்,’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: