கடந்த 6 மாதங்களில் வாகன விற்பனை 5வது முறையாக சரிந்தது - சியாம் தகவல்

புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை கடந்த டிசம்பர் மாதமும் சரிவை சந்தித்துள்ளது. இத்துடன், கடந்த 6 மாதங்களில் 5வது முறையாக விற்பனை சரிவடைந்துள்ளது.பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பாதுகாப்பு விதிகள் என அடுத்தடுத்து வாகன துறையினருக்கு சோதனைக்காலமாக அமைந்து வருகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சீசனில் கூட வாகன விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆண்டு இறுதியில் சலுகைகள் அறிவித்தபோதும் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த டிசம்பர் மாத விற்பனை சரிந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

 இந்த அமைப்பு அறிக்கையின்படி, பயணிகள் வாகனங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் 2,38,692 விற்பனை ஆகியுள்ளன. முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 2,39,723 ஆக இருந்தது. இதுபோல் உள்நாட்டு கார் விற்பனையும் 2.01 சதவீதம் சரிந்து 1,55,159 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் 1,58,338 ஆக இருந்தது.

நவம்பரிலும் பயணிகள் வாகன விற்பனை 3.43 சதவீதம் சரிந்துள்ளது. அக்டோபரில் மட்டும் 1.55 சதவீதம் அதிகரித்தது. மற்றபடி ஜூலையில் 2.71 சதவீதம், ஆகஸ்டில் 2.46 சதவீதம், செப்டம்பரில் 5.61 சதவீதம் என சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து சியாம் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், வழக்கமான ஆண்டுகளை போல பண்டிகை காலங்களில் கூட இந்த ஆண்டு விற்பனை நிகழவில்லை. டீலர்களிடம் விற்காமல் தேங்கியுள்ள வாகன எண்ணிக்கை அதிகரித்தது. நடப்பு மாதத்தில் விற்பனை சற்று உயர்வு மற்றும் வாகனங்களை குறைவாக உற்பத்தி செய்தது போன்ற காரணங்களால் வாகன தேக்கம் 45 முதல் 50 நாட்கள் என இருந்தது 30 முதல் 35 நாட்களாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கடனுதவிகள் குறைந்தது போன்றவற்றால் விற்பனை குறைந்தது. வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் விற்பனை அதிகரிக்கலாம் என்றார்.

‘ஸ்டீல் இறக்குமதி தடையால்கார் உற்பத்திக்கு ஆபத்து’:

கார் உற்பத்திக்கு வெளிநாடுகளில் இருந்து உயர் தர ஸ்டீல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு தடை விதிக்கும் வகையில். பிஐஎஸ் தரச்சான்று பெற்ற ஸ்டீல்களை பயன்படுத்த வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார் உற்பத்தியில் 90 சதவீத ஸ்டீல் உள்நாட்டு உற்பத்திதான் பயன்படுத்தப்படுகிறது. 10 சதவீத உயர் ரக ஸ்டீல் பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை இங்கேயே உற்பத்தி செய்வது நடைமுறை சாத்தியமற்றது; செலவு அதிகமாகவும். எனவே, உயர் ரக ஸ்டீல் இறக்குமதி தடையை போதிய மாற்று ஏற்பாடு இல்லாமல் அமல்படுத்தினால் கார் உற்பத்தி முடங்கிவிடும் என்று சியாம் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்தார்.

பிஎஸ் 6 விதிகளால் விலை அதிகரிக்கும்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 தர விதிகள் அமலுக்கு வருகின்றன. அப்போது வாகனங்கள் விலை அதிகரிக்கும். குறிப்பாக டூவீலர்களின் விலை உயரும். எனவே, புதிய விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பு இந்த ஆண்டில் வாகன விற்பனை உயரும் என்ற நம்பிக்கை உள்ளதாக சியாம் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: