சொன்னதை செய்தாரா உங்கள் (கள்ளக்குறிச்சி ) எம்.பி காமராஜ் ?

இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!

n சார்.... வணக்கம்...

சொல்லுங்க...

n எம்பி காமராஜ் சார் தானே...

ஆமா...

n நான், தினகரன் நாளிதழ்ல இருந்து பேசுறேன்...

சரி...

n கள்ளக்குறிச்சி தொகுதிய பத்தி அலசல் செய்தி போடுறோம்...

சரி...

n தொகுதிக்கு இதுவரைக்கும் நீங்க

என்ன செய்திருக்கீங்கன்னு பேட்டி எடுக்கனும்...

நேர்ல வரலாமா?

(மறுமுனையில் எரிச்சல் எகிறியது)

நான் எதுக்கு உங்களுக்கு பேட்டி கொடுக்கணும்?

n நீங்க செய்த சாதனைய மக்கள் தெரிஞ்ச்சிக்கதான்...

நான் எந்த பேப்பருக்கும் பேட்டி

கொடுக்குறுதில்ல...

n ஏன் சார்...?

முதல்ல நீங்க உண்மைய போட மாட்டீங்க...

n உண்மையா இல்லையான்னு மக்கள் முடிவு பண்ணட்டுமே சார்... நீங்க உங்க சாதனைய சொல்லலாமே...

டைம் வேஸ்ட்... போன வையுங்க...

 - சொன்னதை செய்தாரா உங்கள்

எம்.பி.?-க்காக கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜை தொடர்பு கொண்டபோது நடந்த தொலைபேசி உரையாடல்தான் இது.

- ஒருவேள சொல்றதுக்கு

ஒன்னுமே இல்லையோ!!!

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது

இது, கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பொய்யாகி கொண்டிருக்கிறது. அந்த புண்ணியத்தை செய்து கொண்டிருப்பவர் எம்பி. காமராஜ். மாபெரும் தலைவரின் பெயரை தாங்கியவர். அதற்கு பொருத்தம் இல்லாதவராக இருக்கிறார். செயல்பாடு இல்லாத இந்த

எம்பிபிஎஸ் டாக்டரால், கழுமுனை குற்றவாளியை போல் கிழிந்து சீரழிந்து கொண்டிருக்கிறது கள்ளக்குறிச்சி தொகுதி. தேர்தலுக்கு முன் எப்படி இருந்ததோ; அதேநிலை தான் இப்போதும். புழுதி பறக்கும் சாலைகள், காய்ந்து போன நிலங்கள், வறண்டு போன நீர்நிலைகள், மவுனமான தொழிற்சாலைகள்... இந்த மக்களின் வறுமை, வெறுமையை பறைசாட்டும் ‘3டி’ காட்சிகள். விவசாயம், சுய தொழில் என சொந்த காலில் நின்றவர்களுக்கு, இப்போது நாடோடி வாழ்க்கை. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கூலிக்கு வேலை தேடி செல்லும் அவலம். வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள், ஆந்திராவில் ‘செம்மர கடத்தல்காரர்’களாக மாறும் கொடுமையும் நடக்கிறது. எல்லாம், பெட்ரோலை ஊற்றி இதயத்தை எரிக்கின்ற வேதனைகள்.

ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு என 6 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது காமராஜின் சாம்ராஜ்யம். இவற்றில் ஏற்காடு பழங்குடியினருக்கான தொகுதி. ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி தனித் தொகுதிகள். இதில் இருந்தே, இந்த தொகுதி மக்களின் வாழ்வுநிலை எப்படி இருக்கும் என்பதை உணரலாம். 2014ல் வேட்பாளராக அறிவித்ததும் மைக்கை பிடித்த காமராஜ், சந்து பொந்துகளை கூட விடாமல் பிரசாரம் செய்தார். வாயில் வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக வீசினார். மகுடி ஊதிய பாம்பு போல, மக்களும் வாக்களித்தனர். அமோக வெற்றி. அதோடு, அதோகதி. மக்களின் சின்ன சின்ன ஆசைகளை கூட நிறைவேற்றாமல் இருக்கிறார் காமராஜ்.

சேகோ எங்கே?

கல்வராயன்மலை,  ஆத்தூர், தலைவாசல் பகுதியில் அதிகப்படியாக மரவள்ளிக்கிழங்கு   பயிரிடப்படுகிறது. இதற்கு போதுமான விலை கிடைக்காததால் தனியாரிடம் அடிமாட்டு   விலைக்கு விவசாயிகள் விற்று வந்தனர்.  நல்ல விலை கிடைக்கும் வகையில்   மரவள்ளியில் இருந்து பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் சேகோ தொழிற்சாலையை அமைத்து தருவேன் என காமராஜ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், தொழிற்சாலையும் வரவில்லை; விவசாயிகள் நிலையும் மாறவில்லை.

அப்படியாண்ணே...!!

முன்னாள்  அமைச்சரான மோகன் ஆதரவாளரான காமராஜ் எம்பி, வரும் தேர்தலில் கண்டிப்பாக  சீட் கிடைக்காது,  எடப்பாடி பழனிசாமி உதவியாளர் ஒருவரும், உளுந்தூர்பேட்டை  குமரகுருவின் மகனும் தொகுதிக்கு குறி வைத்துள்ளனர். ‘மீண்டும் போட்டியிட போறீங்களாண்ணே...’ என எம்பி.யிடம் கட்சிக்காரர்கள் கேட்டால் டென்ஷன்  ஆகிவிடுகிறாராம்.

பழனிசாமிக்கு ஜெ...!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி.தினகரன் அணி, ஓபிஎஸ்  அணி என  2 அணிகளாக  பிரிந்து செயல்பட்டனர். அப்போது, காமராஜ் மட்டும் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டார். தற்போது, இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருக்கிறார்.

நீ பாதி- நான் பாதி

சேலம்   மாவட்டத்தின் ராசிபுரம் மக்களவை தொகுதியில்தான் முதலில் கள்ளக்குறிச்சி பேரவை தொகுதி இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் புதிய மக்களவை தொகுதியாக மாற்றப்பட்டது. அதில், விழுப்புரம்   மாவட்டத்தில் உள்ள  கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் பேரவை தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு பேரவை தொகுதிகளும் சேர்க்கப்பட்டன. முதலில், 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக.வை சேர்ந்த ஆதிசங்கர் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் காமராஜ் வென்றார்.

தலைதெறிக்க ஓட்டம்

தத்து கிராமமான க.அலம்பளத்தில் நாலரை ஆண்டுகளாக அடிப்படை வசதிகள்  எதுவும் செய்யவில்லை என புகார் கூறப்பட்டதால், மத்திய குழு திடீர் ஆய்வு செய்தது. அப்போது, எம்பி.யும் உடன் சென்றார். மத்திய  குழுவிடம் மக்கள் சரமாரியாக புகார் கூறியபோது, ‘நான் சொன்னேன். அதிகாரிகள்தான் செய்யவில்லை. நான் என்ன செய்ய முடியும்?’ என காமராஜ் சப்பைக்கட்டு கட்டினார். ‘என்ன செஞ்சி கிழிச்சீங்க?’ன்னு மக்கள் அவரிடம் ஆவேசமாக கேட்டது இன்னமும்  காதில் ஒலிக்கிறது. மக்களின் ஆவேசத்தை பார்த்து, காமராஜ் அன்று பிடித்த ஓட்டம் இப்போதும் கண்ணில் நிற்கிறதாம்.

மண்ணின் மைந்தர்கள்

கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய விவசாய நீர் ஆதாரமாக இருப்பது கோமுகி அணை. இது, அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒருமுறைதான் நிரம்பும். காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,024.29 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது.  பெரும்பாலும் இந்த அணை காய்ந்தே கிடப்பதால், விவசாயிகள் கட்டுமான வேலை  உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு செல்கிறார்கள். இதை தடுத்து, மண்ணின் மைந்தர்களை காக்க, காமராஜ் கடுகளவும் முயற்சிக்கவில்லை.

புதிய மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக  பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை முதல்வர் பழனிச்சாமி சமீபத்தில் நிறைவேற்றினார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி, இனிமேல் புதிய மாவட்டத்தின் அங்கமாகி விடும். ஆனால், இந்த கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பெருமையில் காமராஜின் பங்கு எள்ளளவும் கிடையாது.

தொண்டர்கள் விரக்தி

மக்களுக்கு மட்டுமல்ல; கட்சி தொண்டர்களுக்கும் கூட கிள்ளி்ப் போட மாட்டாராம் காமராஜ். சின்னச் சின்ன  டெண்டர்களையும் தனது உறவினர்களுக்கு மட்டுமே எடுக்க வழிவகை செய்து வருகிறார் என குமுறுகின்றனர் சொந்த கட்சியினர். இதனால், அவர்் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பெரும்பாலும் புறக்கணித்து    விடுகிறார்கள்.

கனவில் ஓடும் ரயில்கள்

கள்ளக்குறிச்சி மக்களின் பெரிய பிரச்னை

போக்குவரத்துதான். சின்ன சேலத்தில் இருந்து ரயிலில் செல்வதை மாற்றி, கள்ளக்குறிச்சியில் இருந்து செல்லும் நிலையை ஏற்படுத்துவேன் என்றார் காமராஜ். ஆனால், மக்கள் இப்போதும் நடராஜா சர்வீசில்தான் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி  ரயில் பாதை திட்டமும் கிடப்பில் கிடக்கிறது. ‘எங்கள் கனவில்தான் ரயில் ஓடுகிறது’ என கூறும் மக்களின் குரலில்  விரக்தி மேலோங்குகிறது.

கடுக்காய்க்கு ‘கல்தா’

ஏற்காடு பேரவை தொகுதியில் மலைவாழ்  பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள்   விவசாயம் செய்ய நிலம் ஒதுக்கப்படும் என்று மாநில வருவாய் துறை அறிவித்தது. ஆனால், வனத்துறையோ, ‘நிலம் தர முடியாது’ என்று கூறி விட்டது.  இந்த மக்களுக்கு நிலம் கிடைக்க காமராஜும் நடவடிக்கைஎதுவும் எடுக்கவில்லை. இந்த மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும்  கடுக்காய்களை எடுத்து, தோல் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்கின்றனர். அதனால், தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கடுக்காய்க்காக இங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்த காமராஜ், அந்த திட்டத்துக்கு கல்தா கொடுத்ததுதான் மிச்சம்

டெல்லி டெங்கு கொசு

காமராஜின் பதவிக் காலத்தில் கடந்தாண்டு மறக்க முடியாதது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியபோது அந்த பழியை டெல்லி மீது போட்டவர்தான் இந்த டாக்டர். ‘டெங்கு கொசுக்கள் டெல்லியில் இருந்துதான் ரயில் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ளன...’ என்று

அவர் கூறியது, கடந்தாண்டின் மிகப்பெரிய ஜோக்காக பரவியது.

நிறைவேறாத ஆசைகள்:

1.கள்ளக்குறிச்சி தொகுதி என்பது முழுக்க முழுக்க குக்கிராமங்களின் தொகுப்பு. பல ஆண்டுகளுக்கு முன் போட்ட சாலைகளில்தான் இன்னமும் வண்டிகள் ஓடுகின்றன.

2.கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில்வே பாதை அமைக்க நிலம் கையகபடுத்தும் பணிகளை விரைவுபடுத்தாமல் அப்படியே கிடக்கிறது.

3.மரவள்ளிக்கிழங்கு, கடுக்காய் தொழிற்சாலையை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு   கொடுக்கப்படவில்லை.

4.கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண புறநகர் பஸ் நிலையம், ரிங்  ரோடு அமைக்கப்படவில்லை.

5.கள்ளக்குறிச்சி  முழுவதும் தண்ணீர் பிரச்னை கடுமையாக இருக்கிறது. ஏரிகளில் கிணறு வெட்டி  குடிநீர் வினியோகம் செய்யும் அத்தியாவசிய திட்டங்களுக்கு கூட எம்பி நிதி  பயன்படுத்தப்படவில்லை.

6.கல்வராயன் மலையில் உற்பத்தியாகும்  கல்லாற்றின் குறுக்கே ராமநாயக்கன் பாளையத்தில் அணைக்கட்டி தண்ணீரை சேமித்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்யவில்லை.

7.சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் மலைவாழ்  மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை. விவசாய விலை பொருட்களை விற்க  சந்தை வசதி அமைத்து தரவில்லை.

8.சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதை அமைப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் முடிந்தும், ரயில்வே நிதி ஒதுக்கவில்லை. அந்த துறை அமைச்சரை சந்தித்து பேச எம்பி ஆர்வம் காட்டாததால், ரயில் இன்னும் வரவில்லை.

9.மிகப்பெரிய  காய்கறி சந்தை தலைவாசல். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள்  சப்ளை செய்யப்படுகிறது. இங்கு குளிர்பதன கிடங்கு அமைத்து தரவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: