ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி போராடி தோற்றார் மர்ரே: வோஸ்னியாக்கி முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தோற்றார். முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸி. ஓபன் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. காயம் காரணமாக இந்த ஆண்டு விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெற  விரும்புவதாக தெரிவித்திருந்த இங்கிலாந்து நட்சத்திரம் மர்ரே (31 வயது), தனது முதல் சுற்றில் ராபர்டோ பாடிஸ்டா அகுத்துடன் மோதினார். அதிரடியாக விளையாடி மர்ரேவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த பாடிஸ்டா 6-4,  6-4 என முதல் 2 செட்களையும் வென்று முன்னிலை பெற்றார்.எனினும், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவால் உற்சாகமடைந்த மர்ரே கடுமையாகப் போராடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் டைபிரேக்கரில் கைப்பற்றி 2-2 என சமன் செய்தார். கடைசி செட்டில்  ஆதிக்கம் செலுத்திய பாடிஸ்டா 6-4, 6-4, 6-7 (5-7), 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் 4 மணி, 9 நிமிடம் போராடிதோல்வியை தழுவிய மர்ரே  கண்ணீர் மல்க விடைபெற்றார்.

விம்பிள்டனில் விளையாட முயற்சிப்பேன் என்று தெரிவித்த அவர், முடிந்தால் அடுத்த ஆண்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்தபோது அரங்கில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி  பாராட்டினர். முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால், மரின் சிலிச், கெவின் ஆண்டர்சன், தாமஸ் பெர்டிச், திமித்ரோவ் ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் தனது  முதல் சுற்றில் 6-7 (7-9), 3-6, 3-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டியாபோவிடம் தோற்று வெளியேறினார்.மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பெல்ஜியம் வீராங்கனை அலிசான் வானை வீழ்த்தினார். மரியா ஷரபோவா (ரஷ்யா), ஏஞ்சலிக் கெர்பர்  (ஜெர்மனி), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), மரியா சக்கரி (கிரீஸ்), பெத்ரா குவித்தோவா (செக்.), சபலென்கா (பெலாரஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா தனது முதல் சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் மோனிகா புயிக்கை (போர்டோ ரிகோ) வீழ்த்தினார், இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: