அடிலெய்டில் இன்று 2வது ஒருநாள் போட்டி பதிலடி கொடுக்குமா இந்தியா?: காலை 8.50க்கு தொடக்கம்

அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2வது ஒருநாள் போட்டி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50க்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து நடந்த பரபரப்பான டெஸ்ட் தொடரில் 2-1 என அபாரமாக வென்ற இந்தியா,  பார்டர் - கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துக் கொண்டதுடன் ஆஸி. மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது.அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. சிட்னியில் நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றுள்ளது. டாசில் வென்று  பேட் செய்த அந்த அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. கேரி 24, கவாஜா 59, ஷான் மார்ஷ் 54, ஹேண்ட்ஸ்கோம்ப் 73, ஸ்டாய்னிஸ் 47*, மேக்ஸ்வெல் 11* ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர்,  குல்தீப் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கத்திலேயே தவான் (0), கோஹ்லி (3), ராயுடு (0) விக்கெட்டை இழந்து தடுமாறியது. ரோகித் -  டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 137 ரன் சேர்த்தது. டோனி 51 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கார்த்திக் 12, ஜடேஜா 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதிரடியாக சதம் விளாசிய  ரோகித் 133 ரன் (129 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். குல்தீப் 3, ஷமி 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஆஸி. பந்துவீச்சில் ரிச்சர்ட்சன் 4, பெஹரன்டார்ப், ஸ்டாய்னிஸ் தலா 2, சிடில் 1 விக்கெட் வீழ்த்தினர். ரிச்சர்ட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றிவிடும். எனவே சிட்னி தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்துடன் கோஹ்லி & கோ  களமிறங்குகிறது.டிவி நிகழ்ச்சியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பதிலாக விஜய் ஷங்கர்,  ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜய் ஷங்கர் நேற்று பிற்பகலில் தான் அடிலெய்டு சென்று இணைந்துள்ளார். இதனால் 11 வீரர்கள் அடங்கிய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. தினேஷ் கார்த்திக்  நீக்கப்பட்டு ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

டோனி நிலைத்து நின்று விளையாடினாலும், அவரது ஆமை வேக ஆட்டம் பின்வரிசை வீரர்கள் மீதான நெருக்கடியை அதிகரிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், டோனி தனது  பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை தக்கவைக்க முடியும். அடிலெய்டு மைதானத்தில் கேப்டன் கோஹ்லி சிறப்பாக விளையாடி ரன் குவித்துள்ளதால், இந்த போட்டியிலும்  ஆஸி. பந்துவீச்சை சிதறடிப்பார் என நம்பலாம். பதிலடி கொடுக்க இந்தியாவும், தொடரை கைப்பற்ற ஆதிரேலியாவும் வரிந்துகட்டுகின்றன.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல்  அகமது, முகமது ஷமி, முகமது சிராஜ், விஜய் ஷங்கர்.ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ஜை  ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹரன்டார்ப், பில்லி ஸ்டான்லேக், மிட்செல் மார்ஷ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: