கையாலாகாத அரசு அமைக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன - பிரதமர் பேச்சு

புதுடெல்லி: ‘‘ஊழலையும், உறவினர்களையும் வளர்ப்பதற்காக கையாலாகாத அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன’’ என பாஜ தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பாஜ தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று 2வது நாளாக நடந்தது. இறுதிநாள் கூட்டமான இதில், பிரதமர் மோடி பேசியதாவது:

காங்கிரசையும்,  அதன் கொள்கைகளையும் எதிர்க்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் தற்போது அக்கட்சியுடன் கைகோர்த்துள்ளன. நாங்கள் வலுவான அரசை விரும்புகிறோம். அப்போதுதான் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  கையாலாகாத அரசு அமைப்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன. வலுவான அரசு அவர்கள் கடையை மூடிவிடும்.

ஊழலில் ஈடுபடுவதற்காகவும், உறவினர்களை வளர்ப்பதற்காகவும், அவர்கள் கையாலாகாத அரசை விரும்புகின்றனர். நாங்கள் அனைத்து மக்கள் வளர்ச்சியையும் விரும்புகிறோம். எங்கள் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை. இது இந்திய வரலாற்றில் முதல் முறை. ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும் என்பதை பா.ஜ நிருபித்துள்ளது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, ஐ.மு. கூட்டணி அரசின் தொந்தரவுகளை பல ஆண்டுகளாக சந்தித்தபோதும், மாநிலத்தில் சிபிஐ நுழைய தடை விதிக்கவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது புதிய இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும். இந்த புதிய முறை மூலம் யாருடைய உரிமைகளும் ஆக்கிரமிக்க முடியாது. அயோத்தியா விஷயத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தடையை ஏற்படுத்த தனது வக்கீல்கள் மூலம் காங்கிரஸ் முயற்சிக்கிறது.அயோத்தி பிரச்னைக்கு தீர்வு ஏற்பட காங்கிரஸ் விரும்பவில்லை. அதன் எண்ணத்தை நாம் மறக்கக் கூடாது, மற்றவர்களை மறக்கச் செய்யவிட கூடாது.  இவ்வாறு அவர் பேசினார்.

சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் போர்
பாஜ தேசிய கவுன்சில் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய அமித் ஷா, ‘இந்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தல், கொள்கைகளுக்கு இடையேயான போர்’ என குறிப்பிட்டார். இதற்கு நேற்று பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ‘‘இந்த மக்களவை தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போட்டியாக இருக்கும்’’ என்றார்.

வெற்றி பெற்றே தீர வேண்டும்
பாஜ தேசிய கவுன்சில் கூட்டத்தில் அமித் ஷா நேற்று பேசுகையில், ‘‘சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றனர். இதனால், நாம் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. சாதிப் பிரிவினை, உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் போன்ற கொள்கைகளை காங்கிரஸ் பரப்பி வருகிறது. வரும் மக்களவை தேர்தல் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் நாம் வெற்றி பெற்றால், பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நீண்ட காலம் ஆட்சி செய்யலாம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED எதிர்க்கட்சி தலைவர் கூறும் ஒவ்வொரு...