டெல்டாவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. கஜா புயலால் பல பகுதிகளில் நெற்பயிர்கள் சேதமடைந்துவிட்டது. எஞ்சிய பகுதியில் இப்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த நெல்லை கொள்முதல் செய்ய போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கணிசமானவை கஜா புயலால் சேதமடைந்து விட்டது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 30 விழுக்காடு குறைவாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

புயலால் ஏற்பட்ட இழப்பு ஒருபுறம் என்றால், அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பு மறுபுறம் என முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாத நிலைக்கு டெல்டா உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நடைமுறையில் நெல் சாகுபடிக்காக முதலீடு செய்த தொகையைக் கூட திரும்பப் பெற முடியாத நிலையில் உழவர்கள் தவிக்கின்றனர்.எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மருத்துவ படிப்பின் தரத்தை நீட் தேர்வு...