பொங்கல் இலவச பொருட்கள் வழங்கியதில் முறைகேடு: விசாரணை நடத்த டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையைெயாட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை,  முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து அதற்கென ₹257.52 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.  ஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச்சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை  ஏற்படுத்துகின்றன.

பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி மற்றும் சர்க்கரையில் மிகப்பெரும்பாலான இடங்களில் 50 கிராம் முதல் 80 கிராம் வரை குறைவாகவே வழங்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. இது உண்மையானால், சுமார் 250 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரையை சில தனிநபர்கள் கைப்பற்றி வெளி மார்க்கெட்டில் விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டின் அடக்கவிலை இன்றைய மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் 24 ரூபாய்க்குள்தான் இருக்கவேண்டும் என்ற யதார்த்தத்தை மீறி, 30 ரூபாய் என்று  விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு பாக்கெட்டிற்கு கூடுதலாகத் தரப்படும் தலா 6 ரூபாய் யாருக்குப் போகிறது? இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது?
இரண்டு அடி நீளக் கரும்பு சந்தையில் அதிகபட்சம் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், 15 ரூபாய் என்று கணக்கு காட்டி, சுமார் 20 கோடி ரூபாய் அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இது யாருக்குப் போனது?உடனடியாக அரசு இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைக்கோல் தொட்டி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் ஆளும் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர் புகுந்து இலவசமாக வழங்கப்பட்ட 1000 ரூபாயில் 100 ரூபாயை  பயனாளிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு போனதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.எனவே நியாயமான முறையில் இலவசப் பொருட்களை வழங்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிடிமானம் இல்லாத தடுப்புகள்...