கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தும், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியும் பங்களாவுக்குள் நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்தும் சென்றது. இதுகுறித்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டதும், கேரளாவை சேர்ந்த கூலிப்படை மூலம் திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

இந்த தொடர் மரணங்கள் அனைத்தும் ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பணம், சொத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காகவே நடந்துள்ளன என்ற சந்தேகம் சயன் அளித்துள்ள வாக்குமூலம் மூலம் தெரியவருகிறது. எனவே, இந்த வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டுமானால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தார்மீக அடிப்படையில் உடனே பதவி விலக வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகோ (மதிமுக): கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளைகக்கு ஆட்களை ஏவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமையையும் தகுதியையும் இழந்து விட்டார். எனவே உடனடியாக பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கும் கொடநாடு கொலைகள், கொள்ளையைக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, தமிழக மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தப்பிவிட அனுமதிக்கக் கூடாது.

டிடிவி.தினகரன் (அமமுக): கொடநாடு குற்றச்சம்பவத்தின் பின்னணியில் பதவியிலிருப்பவரது பெயரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் கீழுள்ள எந்த விசாரணை அமைப்பும் முறையான விசாரணையை பயமின்றி மேற்கொள்ளுமா என்று கேள்வி எழுகிறது.  

முத்தரசன்( இந்திய கம்யூனிஸ்ட்):  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஏப்ரலில் நடந்த கொள்ளை சம்பவத்திலும், இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பங்கிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் உட்பட பல மர்ம சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த குற்றச் சம்பவங்களின் நிழல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்துள்ளது.
 
திவாகரன்(அ.தி.க. பொது செயலாளர் ): கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கு தொடர்பாக வழக்கு பதிந்து சிலர் கைது செய்திருப்பதால் அவ்வழக்கு முடிந்து விட்டது என சொல்லி விட முடியாது. உண்மையில் யார் குற்றவாளி என தெரியவில்லை. இதில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கழுத்தை நெரித்து மூதாட்டி கொலையா?