ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் வீடியோ வெளியீடு: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2017-ல் கொடநாடு எஸ்டேட் காவலாளிகள் கொலை  விவகாரம் குறித்து தெகல்கா ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பத்தரிக்கை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் தனது புலன் விசாரணை குறித்த  வீடியோவை பத்தரிக்கையாளர் மேத்யூஸ் நேற்று வெளியிட்டார். சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம்  தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ ஆவணம் குறித்த புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான  வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.  ஜெயலலிதா எந்த ஒரு நிர்வாகியிடமும் எந்த ஒரு ஆவணத்தையும் எப்போதும் பெற்றதில்லை என்றும் கூறினார்.

கோடநாடு சம்பவம் குறித்த வீடியோ வெளியீட்டில் அரசியல் பின்புலம் உள்ளது என்றும் தவறான செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்  .நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றார். கோடநாடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். நீதிமன்றத்தில்  ஏதும் சொல்லாதவர்கள் தற்போது ஏதோ புதிதாகச் சொல்லி வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்று தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?...