பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் முன்பதிவு தொடங்கியது

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.  உச்சநீதிமன்ற தடைக்கு எதிராக தமிழக மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. இந்நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் வரும் 15ம் தேதி, அலங்காநல்லூரில் வரும்17-ம் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை ஒரு கட்சியை சேர்ந்த குழுவினர் தான் நடத்தி வருகின்றனர். 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் தலைமையில் கிராம மக்கள்  சார்பிலும் இந்த விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கட்சியை சேர்ந்தவர்களே விழாவை நடத்துவது ஏற்புடையதாகாது. எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை கிராம  மக்கள் பங்களிப்புடன் நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு  ஆகியோர் முன்பு நேற்று காலையில் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் அனைத்து தரப்பினருக்கும் சமஉரிமை அளிக்கும் வகையில் 24 பேர் கமிட்டி உறுப்பினராக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 11 பேர் என  மொத்தம் 35 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த முடிவு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்  வழங்கப்படும் என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாடுபிடி  வீரர்கள் முழு உடல் பகுதியுடன் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் 800 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை நிலஉரிமைதாரர்கள் முன்வரலாம்