தொடர் விடுமுறை, பொங்கல் பண்டிகை: சென்னையில் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதல்

சென்னை: தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்றதால் சென்னையில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  தமிழகத்தில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் பல தனியார் நிறுவனங்களும், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கியிருக்கின்றன. இதனால் வெளியூரில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று  கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே, தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், ஆம்னி நிர்வாகம் ஆகியவை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

குறிப்பாக, தமிழக அரசு, அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தினசரி இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளை தவிர, நேற்று முதல் தினமும் 5,163 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.மொத்தம் 14,263  பேருந்துகள் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து 10,445 சிறப்பு பேருந்து என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரம்  உள்ளிட்ட 5 இடங்களில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். சிலர் இணையதள முகவரிகளின் மூலமாகவும் முன்பதிவு செய்கிறார்கள். தற்போதைய  நிலவரப்படி, 1 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில் நேற்று இரவு 7 மணி வரை 85 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை ஒரு  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

இதற்கிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 250 இணைப்பு பேருந்துகள் இயக்க எம்.டி.சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இந்த பேருந்துகள் நேற்று,  இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 4 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. இதன்மூலம் மாநகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிதாக புதிய பேருந்து நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து தங்கள் சொந்த  ஊர்களுக்கு செல்ல முடியும். இதேபோல், பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி சேவை 18004256151 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை