ஸ்டீல் இறக்குமதிக்கு கெடுபிடி கார் உற்பத்தி பாதிக்கும்: தயாரிப்பாளர்கள் கவலை

புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து ஸ்டீல் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதிப்பதால் வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க மேக் இன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து உயர் தரத்திலான ஸ்டீல் இறக்குமதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை ஸ்டீல் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட்டில் வெளியிட்டது.  இந்த உயர் ரக ஸ்டீல்கள் கார் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால், இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையில் கார் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவை ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

 இதுகுறித்து கனரக தொழில்துறை அமைச்சர் ஆனந்த் கீதே, உருக்குத்துறை அமைச்சர் பீரேந்தர் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ஸ்டீல் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தால், கார் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்ய தொடங்கும். இது மேக் இன் இந்தியா திட்ட நோக்கத்துக்கு எதிரானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். இந்த கெடுபிடி அடுத்த மாதம் 17ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.
 இதுதொடர்பாக கார் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உற்பத்தியாளர்கள் இறக்குமதி கெடுபிடி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், கார் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் உயர் ரக ஸ்டீல்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். இதற்காக கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதனை அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தங்கம் இறக்குமதி 37.43 சதவீதம் எகிறியது