மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி-பகுஜன் கூட்டணி உறுதியானது: மாயாவதி, அகிலேஷ்இன்று அறிவிப்பு

லக்னோ: மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இதை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இன்று கூட்டாக அறிவிக்கின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜ கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களை கைப்பற்றியது. இம்மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெற்ற ஆட்சியை பிடித்தது. இதனால், இம்மாநிலத்தில் பலம் பொருந்திய கட்சிகளாக உள்ள சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பலவீனமாகின. இதனால், பாஜ.வின் செல்வாக்கு மேலும் தங்கள் மாநிலத்தில் உயர்வதை தடுக்க நினைத்த எதிரும் புதிருமான இவ்விரு கட்சிகளும், தங்களின் பகையை மறந்து கோர்த்தன. கடந்தாண்டு இம்மாநிலத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர், கைரானா மக்களவை இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 3 தொகுதிகளையும் வென்றன.

இதையடுத்து, மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர இரு கட்சிகளும் முடிவு செய்தன. சமீபத்தில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி அமைக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன. தங்கள் கூட்டணியில் அவர்கள் காங்கிரசை சேர்க்கவில்லை. பகுஜன் தலைவர் மாயாவதி - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் தரப்பில் தொகுதி பங்கீடு பற்றி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் தற்போது சமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில், ரேபரேலி, அமேதியை தவிர தலா 37 தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ரேபரேலி, அமேதியில் சோனியா, ராகுல் போட்டியிடுவார்கள் என்பதால், இங்கு வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்று இவை முடிவு செய்துள்ளன. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அகிலேஷ் யாதவும், மாயாவதியும் லக்னோவில் இன்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து, இந்த அறிவிப்பை வெளியிட உள்ளனர். இரு கட்சிகளின் தேசிய செயலாளர்கள் ராஜேந்திர சவுத்ரியும், எஸ்சி மிஸ்ராவும் நேற்று இதை தெரிவித்தனர். காங். தனித்து போட்டி இந்த நிலையில், உத்தர பிரதேச காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் பாக்‌ஷி நேற்று கூறுகையில், ` உத்தர பிரதேசத்தில் வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட காங். தயாராக உள்ளது. அதேநேரத்தில் ஒருமித்த கொள்கை உடைய கட்சிகள் வந்தால் கூட்டணிக்கு தயார்’ என தெரிவித்துள்ளார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களவை தேர்தலில் தோற்றதால் விரக்தி...