தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் 60அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது: டிரைவர் உள்பட 2பேர் பலி

தர்மபுரி:  தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் 60 அடி பள்ளத்தில் உருளைக்கிழங்கு ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து டிரைவர் உட்பட 2 பேர் பலியாகினர். 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிக்கொண்டு, திருநெல்வேலிக்கு லாரி புறப்பட்டு வந்தது. சேலத்தை சேர்ந்த சின்ராஜ் (28) லாரியை ஓட்டிவந்தார். இந்த லாரி நேற்று பிற்பகல், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியின் இடிபாட்டில் சிக்கி டிரைவர் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையோரத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கந்தசாமி (40), ராஜா, கன்னி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை, மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். மேலும் 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் லாரியின் இருந்த உருளைக்கிழங்கு மூட்டை கிழிந்து, கிழங்குகள் அனைத்தும் கொட்டியது. விபத்து காரணமாக 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் தொப்பூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவர் அடித்து கொலை