சிவகாசி, வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் டிக் - டாக் ‘கம்பி எண்ணும்’ 13 வாலிபர்கள்

விருதுநகர்: சிவகாசி, வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் டிக்-டாக் செய்து பதிவேற்றிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான  ஆஃப் ‘டிக் டாக்’. இதில் பல்வேறு பாடல்கள், காமெடி வசனங்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட்  செய்வது, இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி  துலுக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (21), தங்கேஸ்வரன் (23),  முருகேசன் (25) குருமதன் (24) ஆகியோர், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு  நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மேல  அலங்காரத்தட்டு கிராமத்திற்கு வாகனத்தில் செல்வதற்காக அனுமதி கேட்டு, கடந்த 10ம் தேதி, சிவகாசி கிழக்கு காவல்  நிலையத்திற்கு வந்தனர்.

பெரும்பாலான  போலீசார் ரேஷன் கடைகளுக்கு காவலுக்கு சென்றுவிட்டதால் போலீஸ் ஸ்டேஷனில்  இளைஞர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது ‘சிறுத்தை’ படத்தில், ‘‘இந்த  வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகணும்...’’’ என்ற வசனத்தை போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியில் நின்று, இளைஞர்கள் ‘டிக்-டாக்’  ஆஃப் மூலம் வீடியோ  எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சம்பந்தப்பட்ட வீடியோ சிவகாசி  கிழக்கு போலீசார் செல்போனுக்கும் கிடைத்தது. இதனை தொடர்ந்து  சம்பந்தப்பட்ட ஈஸ்வரன், தங்கேஸ்வரன்,  முருகேசன், குருமதன் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

இதேபோல், வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த தாயில்பட்டி குருசாமி, கருப்பசாமி, ராஜா, சண்முககுமார், ராஜேஸ்வரன், முகாராஜா, ஹரிஹரபிரபு உட்பட 9 பேர் செல்போனில் வீடியோ எடுத்து, டிக்-டாக் ஆஃப்பில் பதிவேற்றம் செய்தனர். இவர்களையும் வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விறுவிறுப்புடன் நடந்து முடிந்த...