குளத்தில் நீரின்றி கருகும் 500 ஏக்கர் பயிர்கள் வயலுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் பாய்ச்சியவருக்கு 24 ஆயிரம் அபராதம்: மின்வாரிய நடவடிக்கையால் விவசாயிகள் அதிர்ச்சி

நெல்லை: குளங்களில் தண்ணீர் இல்லாததால் ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற நெல் வயலில் டேங்கர் மூலம் தண்ணீர் பாய்ச்சிய விவசாயிக்கு மின்வாரியம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு பிசான சாகுபடி தாமிரபரணி பாசன பகுதியில் அமோகமாக நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உள்ள தண்ணீரை கொண்டு விவசாயிகள் ஓரளவுக்கு நெல் சாகுபடியை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் தாமிரபரணி பாசனமில்லாத ஊத்துமலை சுற்று வட்டார பகுதிகளில் இவ்வாண்டு குளங்கள் தண்ணீரின்றி காட்சியளிக்கின்றன. குறிப்பாக காவலாக்குறிச்சி குளம், கரையாலூர், கருவந்தா, சோலைசேரி, குறிச்சான்பட்டி, வெண்ணிலிங்கபுரம், ஊத்துமலை பகுதி குளங்களில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் அப்பகுதியில் சுமார் 500 ஏக்கரில் நெல் பயிர்கள் கருகும் நிலையில் காணப்படுகின்றன.   குளங்களில் தண்ணீரின்றி நாற்று நட்ட சில விவசாயிகள் அவற்றை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். சில விவசாயிகள் கருகும் பயிர்களை காப்பாற்ற பக்கத்து ஊர்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை டேங்கர் டிராக்டரில் வாங்கி வந்து நெற்பயிர்களை நனைத்து வருகின்றனர்.

வெண்ணிலிங்கபுரம், மருதபுரம் புதூர் விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள தட்டப்பாறை கிணற்றில் இருந்து நீரை இறைத்து டேங்கரில் கொண்டு செல்கின்றனர். தட்டப்பாறை பகுதியில் பெரும்பாலும் தென்னை, எலுமிச்சை, கடலை உள்ளிட்ட தோட்டப்பயிர்களே பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெண்ணிலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற விவசாயி தட்டப்பாறையில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து டிராக்டர் டேங்கரில் தண்ணீர் சேகரித்து வயலுக்கு கொண்டு சென்றுள்ளார். இதை வழிமறித்த மின்வாரிய தணிக்கை துறை அதிகாரிகள், அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு ரூ.24 ஆயிரத்து 60 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து தொழிலாளர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, வெண்ணிலிங்கபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி ஆகியோர் கூறுகையில், ‘‘தற்போது குளங்களில் தண்ணீர் இல்லை. கருகும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடுகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கை விவசாயிகளுக்கு பண இழப்பையும், மனஉளைச்சலையும் உருவாக்குகிறது’’ என்றனர். இதுகுறித்து நெல்லை கலெக்டரை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பழநி வையாபுரி குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்