சிவகங்கையில் கொட்டி வைத்த குப்பையை கூட்டி சுத்தம் செய்தார் கவர்னர்

சிவகங்கை: கவர்னர் பன்வாரிலால் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நேற்று சாலையில் கொட்டிய குப்பையை கூட்டி தூய்மை பணியில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று சிவகங்கை வந்தார். இவரது வருகையையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தூய்மை பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டில் உள்ள திருச்சி பஸ்கள் நிறுத்துமிடத்தில், நேற்று அதிகாலை 5 மணி முதலே ஓரத்தில் காய்ந்த மர இலைகள், குப்பைகளை அள்ளி வந்து கொட்டி வைத்திருந்திருந்தனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித், துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து கீழே கொட்டி வைத்திருந்த குப்பைகளை பெருக்கி தூய்மைப்படுத்தினார். 5 நிமிடம் மட்டுமே இப்பணி நடந்தது.

பின்னர் கவர்னர் பேசுகையில், ‘‘சிவனையும், கங்கையையும் கொண்டு சிவகங்கை என்கிற புனிதப்பெயரை இவ்வூர் கொண்டிருக்கிறது. பெயரிலேயே ஆன்மிகச் சிறப்பை கொண்டுள்ளது. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், கங்கையை தனது பெயரில் கொண்ட இந்த ஊரையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சுத்தம் என்பதை நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். வீடு, தெரு சுத்தமாக இருந்தால்தான் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்’’ என்றார்.  தொடர்ந்து தமிழில் ‘நன்றி’ என தெரிவித்த அவர், ‘‘தமிழ் இனிமையான மொழி’’ என்றார். இதில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை எம்பி செந்தில்நாதன், கலெக்டர் ஜெயகாந்தன், எஸ்பி ஜெயச்சந்திரன், ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சிவகங்கை விருந்தினர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. பகல் 12.30 மணி முதல் 1.40 மணி வரை 116 மனுக்களை பெற்ற கவர்னர் மதியம் 2.15 மணிக்கு சிவகங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கிளம்பி சென்றார். கவர்னர் வருகையையொட்டி தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், டிஐஜி காமினி, சிவகங்கை எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சுமார் 1,500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

‘மீண்டும் வருவேன்’
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருக்கும் கடைகளுக்கு  சென்று, ‘‘குப்பையை எப்படி கையாள்கிறீர்கள்?’ என்று கேட்ட கவர்னர், ‘‘அடுத்த முறை திடீர் ஆய்வு நடத்துவேன். இது போன்ற குறை அடுத்து இருக்கக்கூடாது’’  என்று கடைக்காரர்களிடம் எச்சரித்து விட்டு சென்றார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கவர்னரை எதிர்த்து மீண்டும் போராட்டம்