பயணிகள் இல்லாமல் 2வது முறையாக பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் இரண்டாவது முறையாக பயணிகள் இல்லாத ரயிலை குறைவான வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் செல்லும்போது திறந்து வழி விடும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் ஒரு இரும்பு பீமில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பயணிகளுடன் மீண்டும் புறப்பட்டு செல்கிறது. ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள் மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்படுவதால் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பழுதான ஷெர்ஜர் தூக்குப்பாலத்தை சீரமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வருகிறது. ரயில் பாலத்தில் தண்டவாளம் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கர்டர்களை, மாற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 7ம் தேதி பாம்பன் ரயில் பாலத்தில் உயரதிகாரிகள் முன்னிலையில் 10 கி.மீ. வேகத்தில் பயணிகள் இல்லாமல், 21 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் ஆய்வு செய்யப்பட்டது. நேற்று இரண்டாவது முறையாக குறைந்த வேகத்தில் பாலத்தில் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதையொட்டி மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து 8 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. அதிர்வுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  இந்த ரயில் பின்பு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதேநேரம் ரயில்வே பொறியாளர் குழு சார்பில், பாம்பன் பாலத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஏர்-இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் பொருட்கள் மாயம்