மின்னல் வேக கார் பைக் மீது மோதியதில் கால் துண்டிப்பு லாரியில் விழுந்து 750 கி.மீ. கடந்து ஆந்திரா சென்ற வாலிபர் உடல் மீட்பு

சென்னை: திருவள்ளூர் அருகே நடந்த அதிவேக சாலை விபத்தில், சிக்கிய வாலிபரின் கால் துண்டான நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடல் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த ஆந்திர லாரியில் விழுந்துள்ளது. 750 கி.மீட்டர் கடந்து சென்று உடல் ஆந்திர மாநிலம் கர்னூலில் மீட்கப்பட்டது. அவரது உடல் நேற்று இரவு திருவள்ளூர் வந்தது. பிரேத பரிசோதனை முடித்து இன்று உடல் ஒப்படைக்கப்படுகிறது. திருவள்ளூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (33). காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.  இவர், கடந்த 9ம் தேதி இரவு 11 மணியளவில் பணி முடிந்து  பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகே செல்லும்போது, திருப்பதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, பைக் மீது மோதியது.  இந்த  விபத்தை ஏற்படுத்திய காரை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பைக்கில் சென்ற சுதாகர் தூக்கி வீசப்பட்டார்.

விபத்து குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரையும், பைக்கையும் மீட்டனர். தொடர்ந்து சுதாகரை தேடியபோது, அவரது ஒரு கால் மட்டும் தனியாக துண்டாகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுதாகரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பைக் மீது கார் வேகமாக மோதியதில் கால் துண்டாகி, எதிரே சென்ற வாகனத்தில் சுதாகர் விழுந்து இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.  அதன்படி, பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் உள்ள கேமராக்கள் மூலம் அவ்வழியாக சென்ற வாகனங்களின் எண்களை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், ஆந்திர மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், சென்னையில் சிமென்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, ஆந்திர மாநிலம் கர்னூல் சென்ற லாரியில் கால் துண்டான நிலையில் வாலிபர் உடல் கிடப்பது குறித்து, கர்னூல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில், அது திருவள்ளூரில் விபத்தில் சிக்கி பலியான சுதாகர் சடலம்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவள்ளூர் போலீசார், சுதாகரின் உறவினர்களுடன் நேற்று முன்தினம் மாலை கர்னூல் சென்றனர். அங்கிருந்து சுதாகரின் உடல் நேற்று  இரவு திருவள்ளூருக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இன்று காலை பிரேத பரிசோதனை முடித்து  உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து  சுதாகரின் உடல் அவரது சொந்த ஊரான அத்திப்பட்டு கிராமத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. விபத்தில் சிக்கி வாலிபர் பலியானதால் அத்திப்பட்டு கிராமத்தில்  உள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மினி வேன் மீது பைக் மோதி வாலிபர் பலி