வல்லூர் அனல் மின்நிலையத்தை மூட உத்தரவு தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தை மூட உத்தரவிட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.  வல்லூர் அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வல்லூர் அனல் மின்நிலைய நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதில், மத்திய அரசின் உத்தரவை மீறி சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், வல்லூர் அனல் மின்நிலையத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து ஆலை இயங்கி வந்துள்ளது.

எனவே, ஆலை தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.இதையடுத்து, வல்லூர் அனல் மின்நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தடையை ரத்து செய்யக்கோரியும், அனல் மின் நிலையத்தை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரியும் அனல் மின்நிலையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்நிலையத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி ஆஜராகி, மின் நிலையம் மூடப்பட்டதால் சென்னையில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல்துறை இந்த ஆலையை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்தால் அதன்பிறகு நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய...