பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் ஒரே நாளில் 1 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதற்கு வசதியாக, 10 நாட்களுக்கு மொத்தமாக 1.37 லட்சம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று மட்டும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர்.தமிழகத்தில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல தனியார் நிறுவனங்களும், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கியிருக்கின்றன. இதனால் வெளியூரில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே, தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், ஆம்னி நிர்வாகம் ஆகியவை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

குறிப்பாக, தமிழக அரசு, அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தினசரி இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளை தவிர, நேற்று முதல் தினமும் 5,163 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.மொத்தம் 14,263 பேருந்துகள் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து 10,445 சிறப்பு பேருந்து என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட 5 இடங்களில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். சிலர் இணையதள முகவரிகளின் மூலமாகவும் முன்பதிவு செய்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, 1 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில் நேற்று இரவு 7 மணி வரை 85 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

ெபாதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், ஆந்திரா செல்லும் பயணிகள் மாதவரம் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், இசிஆர் மார்க்கமாக பாண்டிச்சேரி, கடலூர் செல்பவர்கள் கே.கே.நகர் அரசு போக்குவரத்து நிலையத்தில் இருந்தும், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், திண்டிவனம், விழுப்புரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோயம்பேட்டில் இருந்து செல்லும் பேருந்துகள் மதுரவாயல், நசரத்பேட்டை வழியாக வண்டலூர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வசூல் ஆம்னிகளுக்கு செக்
சில ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிகள் குறித்து, 18004256151 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி போக்குவரத்துத்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை