நீதிமன்ற உத்தரவு தளர்த்தப்பட்டதால் ரேஷன் கடைகளில் மீண்டும் 1000 வழங்கப்பட்டது: கடை ஊழியர்கள் குழப்பம்

சென்னை: வசதி படைத்தவர்களுக்கு 1000 வழங்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று மதியம் முதல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மீண்டும் ₹1000 வழங்கப்பட்டது. இப்படி மாற்றி மாற்றி உத்தரவு வந்ததால் ரேஷன் கடை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, கடந்த 7ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 1000 வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1000 வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வசதி படைத்தவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று பிற்பகல் முதல் சர்க்கரை கார்டுதாரர்கள் மற்றும் எந்த பொருளும் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு 1000 வழங்குவது ரேஷன் கடைகளில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, நேற்று மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 வழங்கலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மதியம் முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 1000 வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதுபற்றி ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவை தொடர்ந்து நேற்று முன்தினம் (வியாழன்) முதல் சர்க்கரை அட்டைதாரர்கள் (என்பிஎச்எச்-எஸ்) மற்றும் எந்த பொருளும் வேண்டாம் (என்பிஎச்எச்-என்சி) என குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு நேற்று 1000 வழங்கவில்லை.

ஆனால் அவர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் நேற்று அனைத்து கார்டுகளுக்கும் வழங்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மதியம் முதல் மீண்டும் அனைத்து கார்டுகளுக்கும் 1000 வழங்கப்பட்டது. பணம் கொடுங்கள் என்றும், பணம் கொடுக்காதீர்கள் என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பு வருவதால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிகளவில் குழம்பி போய் உள்ளோம்” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பாடத்திட்டத்தில் நீதிமன்ற ஆணைப்படி திருக்குறளுக்கு முக்கியத்துவம்