பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி சிறிய ஓட்டல், பிளாட்பார கடைகளில் உணவு பொருட்கள் விலை உயர்வு: இட்லி 8, பூரி செட் 25க்கு விற்பனை

சென்னை: பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி சிறிய ஓட்டல், பிளாட்பார கடைகளில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி விட்டனர். இட்லி 8, பூரி செட் 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்பப்படும் பைகள், பொட்டலங்கள். நீர்நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலம். பிளாஸ்டிக் கொடிகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள். பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள் என்று 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க தமிழக அரசு தடை விதித்தது.

மேலும் இந்த பொருட்களை சேமித்து வைக்கவும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெரிய ஓட்டல்களில் சில உணவு பொருட்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்சல் வாங்குபவர்களுக்கு பை கட்டணமாக 5 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி சிறிய ஓட்டல்கள் முதல் பிளாட்பார கடைகள் வரை உணவு பொருட்களின் விலையை திடீரென உயர்த்தி விட்டனர். சாதாரண ஓட்டல்களில் பிளாஸ்டிக் தடைக்கு முன்னர் பூரி செட் 20க்கு விற்கப்பட்டது. இதனை 5 உயர்த்தி, தற்போது 25க்கு விற்கப்பட்டு வருகிறது. பொங்கல் 20லிருந்து 25, இட்லி 5, 6, 7 என்று விற்கப்பட்டது. இது முறையை 6, 7, 8 என்றும், தோசை 20லிருந்து 25 என்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல பாஸ்ட்புட் கடைகளில் 70,80க்கு விற்கப்பட்ட பிரைடு ரைஸ் 80, 90க்கும், பரோட்டா 10 லிருந்து 12, 13, பிரியாணி 70, 80 என்று விற்கப்பட்டது. 90, 100 என்றும், ஆம்லெட் 10, 15க்கு விற்கப்பட்டது. இது தற்போது 15, 20 என்று உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு உணவு ெபாருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பார்சலுக்கு தான் விலை உயர்ந்தது என்று பார்த்தால் சிறிய ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் வகையில் உள்ளது. பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்களில் பேச்சுலர்ஸ் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள் தான் விலை குறைவாக இருக்கும் என்று அதிக அளவில் சாப்பிடுவது வழக்கம். இந்த விலை உயர்வு அவர்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது. இதற்காக மாத பட்ஜெட்டில் கூடுதலாக பணம் ஒதுக்கும் நிலைக்கு ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் கூறுகையில், “எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சிறிய ஓட்டல் மற்றும் பிளாட்பார கடைகளில் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பார்சல் சாப்பாடுக்கு தான் இந்த விலை உயர்வு என்று எண்ணிருந்தால், ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்துகிறது. பிளாஸ்டிக் தடையால் ஓட்டல்களில் வாழை இலை பயன்படுத்துவது என்பது வரவேற்க தக்கது தான். பிளாஸ்டிக் பேப்பரை விட வாழை இலை விலை உயர்வு குறைவு தான். அப்படியிருக்கும் போது ஏன்? விலையை உயர்த்தினார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற விலை உயர்த்திய ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED அதிகாரிகள் எச்சரிக்கை செய்தும் பயனில்லை பிரபல ஓட்டலில் கேஸ் லீக்