மீன் வியாபாரியை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 25 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மீன் வியாபாரியை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  தண்டையார்பேட்டை, பல்லவன்நகரை சேர்ந்த திவாகர் (26) மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். காசிமேடு விசைப்படகு உரிமையாளர் அய்யனாரிடம் 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் அவர் மீன் சம்பந்தப்பட்ட பொருட்களை கொடுக்கவில்லை. இதை கேட்டபோது தகராறு செய்து என்னை தாக்கினார். அதோடு மட்டுமல்லாமல் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் ஆய்வாளர் சாம்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் அக்பர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் என்னை சரமாரியாக தாக்கி லாக்அப்பில் தள்ளினர். நீதிமன்றத்திற்கு என்னை அழைத்து சென்றபோது அடித்தாக நீதிபதியிடம் கூறக்கூடாது என்று மிரட்டினர்.

இதனால் பயந்து போய் எதுவும் சொல்லவில்லை. 7 நாட்கள் சிறையில் இருந்தேன். பின் வீட்டிற்கு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை கடுமையாக தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.  இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ெஜயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அக்பர் ஆகிய இருவரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே இருவருக்கும் தலா 25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 4 வாரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வழித்தட பிரச்னையில் டிரைவருக்கு...