தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை:  பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த, 3 ஆண்டு சிறைதண்டனைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் என்ற கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோருடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார். அந்த போராட்டத்தில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பஸ்கள், போலீஸ் பைக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகலூர் போலீசார் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை,கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பாலகிருஷ்ணா ரெட்டி எம்.எல்.ஏ என்பதால் போலீஸ் ஜீப் எரிக்கப்பட்ட வழக்கு இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்ய இருப்பதால் சிறை செல்வதை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தங்கள் தரப்புக்கு போதுமான அவகாசம் அளிக்காமல் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்கல் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்தீபன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில், மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா ஆஜராகி வாதிடும் போது, சம்பவம் நடந்த போது பாலகிருஷ்ண ரெட்டியும் அருகில் இருந்தார் என்று போலீஸ் ஒரே ஒரு சாட்சியம் மட்டுமே அளித்துள்ளது. மொத்தம் உள்ள, 28 சாட்சிகளில், 16 சாட்சிகள் போலீசார். இதுபோன்ற குற்றங்களுக்கு தீர்ப்பளிக்கும் போது குறைந்தபட்சம், 3 சாட்சிகளாவது இருக்க வேண்டும்.

கிரிக்கெட் வீரர் சித்து வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாததால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உத்தரவு இந்த வழக்கிலும் பொருந்தும் என்றார்.
  இதைக்கேட்ட நீதிபதி, மாநில அரசுக்கு எதிராக கலவரம் செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த அடிப்படையில் தண்டனைக்கு தடை கோருகிறீர்கள் என்று கேட்டார். மேலும் அரசு தரப்பு இந்த வழக்கில் என்ன நிலையை எடுத்துள்ளது என்றும் கேட்டார். அதற்கு அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் நீதிபதியிடம், இந்த நீதிமன்றத்திற்கு உதவ அரசுத் தரப்பு தயாராகவுள்ளது. வழக்கின் எப்ஐஆரில் பாலகிருஷ்ணா ரெட்டியின் பெயர் இல்லை என்றார்.  இதைக்கேட்ட நீதிபதி அப்படியென்றால் நீங்கள், மனுதாரருக்கு ஆதரவு தருகிறீர்களா என்று கேட்டார். அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல் இல்லை. வழக்கின் விபரத்தை தெரிவிக்க முன்வந்தேன் என்றார்.

 வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் பாலகிருஷ்ண ரெட்டி சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர், அவர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் பொது சொத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சட்ட விரோத போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த போராட்டத்தின் போது 5 அரசு பேருந்துங்களும் போலீஸ் ஜீப்பும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கிற்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.  சட்ட விரோதமாக கூடுவதோ, மற்றவர்களுடன் சேர்ந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதையும் இந்த நீதிமன்றம் ஏற்காது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்பால் மனுதாரர், தகுதி இழந்துள்ளார். என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் உரிய முகாந்திரம் உள்ளதை கருத்தில் கொண்டு தீர்பளித்துள்ளது. ஒரே ஒரு சட்சியம் மட்டுமே பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக சாட்சியளித்ததாக அவர்கள் தரப்பு கூறியிருப்பதை ஏற்க முடியாது.

சம்பவம் நடந்த போது அவர் அங்கே இருந்திருக்கிறார். அந்த சம்பவத்திலும் அவர் கலந்துகொண்டு இருக்கிறார். இதை அந்த சாட்சி தெளிவாக தெரிவித்துள்ளது. பொது வாழ்க்கையில் பொறுமையும், நல்ல செயல்பாடுகளையும் தான் மக்கள் எதிர்பார்கின்றனர். அப்படிபட்ட நபர்களால் தான் அரசு செயல்பட வேண்டும் என்று அரசு கூறுகிறது. இதுபோன்று தலைவர்களே கலவரத்தில் ஈடுபடுவது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, போன்ற செயல்களில் ஈடுபடுவதின் மூலம் உண்மையான மக்கள் பிரதிநிதியாகிவிட முடியாது. சம்பவம் நடந்தபோது, அவர் எம்.எல்.ஏவாக இல்லை, ஆனால் சட்டத்தின் முன்பு அவர் தவறு செய்தது நிரூபணமாகியுள்ளது. எனவே அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவும் குற்றவாளி என்று அறிவித்தை ரத்து செய்ய கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது.

அடுத்து என்ன...
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, தண்னையை நிறுத்தி வைக்கவோ உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால் பாலகிருஷ்ண ரெட்டி சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படவேண்டும். இந்த நடைமுறைகளுக்குப் பிறகே அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற வேண்டும். அவரது கோரிக்கை உயர்நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித...