முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.50க்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து நடந்த பரபரப்பான டெஸ்ட் தொடரில் 2-1 என அபாரமாக வென்ற இந்தியா, ஆஸி. மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளதால் அதற்கான ஒத்திகையாகவே இந்த தொடர் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் சிட்னி போட்டிக்கான 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணிக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், இந்திய வியூகத்தில் பெரிய மாற்றம் இருப்பது நிச்சயம். டெஸ்ட் தொடரில் கணிசமாக ரன் குவிக்கத் தவறிய ராகுல் தற்போது பார்மில் இல்லாததால் அவர் அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால், சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் நிச்சயம் விளையாடி இருப்பார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான ஜடேஜா சேர்க்கப்படுவார் என தெரிகிறது. அவருடன் இணைந்து குல்தீப் யாதவ் சுழல் தாக்குதலை மேற்கொள்வார்.
புவனேஷ்வர், முகமது ஷமி, கலீல் அகமது என வேகக் கூட்டணி அமையலாம். ரோகித், தவான், கோஹ்லி, ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதார், ஜடேஜா என்று அதிரடி பேட்டிங் வரிசை உள்ளதால் ரன் குவிப்பு குறித்து இந்திய அணி கவலைப்பட அவசியமில்லை. கடந்த 2016 ஆஸி. சென்று விளையாடிய ஒருநாள் தொடரில் 1-4 என மண்ணைக் கவ்வியுள்ளதால், இம்முறை இந்தியா பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதே சமயம், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுகிறது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக ஸ்மித், வார்னர் இல்லாதது அந்த அணிக்கு தொடர்ந்து பின்னடைவை கொடுக்கும். முன்னணி வேகங்கள் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதும் பந்துவீச்சை பலவீனமாக்கி உள்ளது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக தொடக்க வீரராகக் களமிறங்க உள்ளார். கேப்டன் ஆரோன் பிஞ்ச்சுடன் இணைந்து அவர் இன்னிங்சை தொடங்குவார்.

கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் பெஹரன்டார்ப் அறிமுகமாகிறார். அனுபவ வேகம் பீட்டர் சிடில் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நாதன் லயன், தனது துல்லியமான சுழற்பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, முகமது ஷமி, முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ஜை ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹரன்டார்ப்.

நேருக்கு நேர்
* இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இதுவரை 128 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா 73 போட்டிகளிலும், இந்தியா 45 போட்டிகளிலும் வென்றுள்ளன. 10 போட்டிகளில் முடிவு இல்லை.

* இந்திய அணி அதிகபட்சமாக 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்.
* தனிநபர் ரன் குவிப்பில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 3,077 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். ஆஸி. தரப்பில் ரிக்கி பான்டிங் 2,164 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
* ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர்களில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா (209 ரன்) முதலிடம் வகிக்கிறார். ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜ் பெய்லி 156 ரன் குவித்ததே அதிகபட்சமாக உள்ளது.
* அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் 9 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸி. தரப்பில் ரிக்கி பான்டிங் (6 சதம்) முன்னிலை வகிக்கிறார்.
* விக்கெட் வேட்டையில் ஆஸி. வேகம் பிரெட் லீ  55 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் கபில் தேவ் (45 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார்.
* இந்திய சுழல் முரளி கார்த்திக் 27 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சிறப்பான பந்துவீச்சாகும். ஆஸி. தரப்பில் கென் மெக்லீ 39 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 3 வெற்றி, ஒரு டை, ஒரு தோல்வி கண்டுள்ளது.
* ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 4 தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.
* சிட்னி மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ள 16 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 13 போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தியா 2 வெற்றியை ருசித்துள்ளது. கடைசியாக 2016ல் நடந்த போட்டியில் இந்தியா 331 ரன் என்ற கடினமான இலக்கை 49.4 ஓவரில் எட்டியது.
* ஒருநாள் போட்டிகளில் 5000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இந்திய தொடக்க வீரர் தவானுக்கு இன்னும் 65 ரன் தேவை.
* ரவீந்திர ஜடேஜா 18 ரன் எடுத்தால் 2000 ரன் மைல் கல்லை எட்டலாம்.
* இந்திய வேகம் புவனேஷ்வர் குமார் 100 விக்கெட் மைல் கல்லை எட்ட இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED முறையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு தலைவலி